இறைச்சி கடைக்காரர் கிரிக்கெட் மட்டையால் அடித்துக்கொலை


இறைச்சி கடைக்காரர் கிரிக்கெட் மட்டையால் அடித்துக்கொலை
x
திருப்பூர்


திருப்பூரில் இறைச்சி கடைக்காரர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். குடும்பத் தகராறு குறித்து பேச வந்தபோது மருமகன் குடும்பத்தினர் இந்த வெறிச் செயலில் ஈடுபட்டுள்ளனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கருத்து வேறுபாடு

மதுரை மாவட்டம் நாச்சிக்குளத்தை சேர்ந்தவர் சலீம் முகமது (வயது 45). இவருடைய மனைவி மும்தாஜ். இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். முகமது சலீம் மனைவி மற்றும் மகள்களுடன் திருப்பூர் பி.என்.ரோடு போயம்பாளையத்தை அடுத்த ராஜாநகரில் வசித்து வந்தார்.

மேலும் அவர் அந்த பகுதியில் இறைச்சிக்கடை நடத்தி வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சலீம் முகமதுவின் மூத்த மகளான ஷகீலா பானுவுக்கும், திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த முகமது மீரான் என்பவரின் மகன் ஷபிபுல்லா என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. ஆனால் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஷகீலாபானு ரம்ஜான் பண்டிகை முதல் திருப்பூரில் உள்ள பெற்றோர் வீட்டில் இருந்து வந்தார்.

கிரிக்கெட் மட்டையால் அடித்துக்கொலை

இந்த நிலையில் குடும்பத்தகராறு காரணமாக பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ஷபிபுல்லா, அவருடைய தந்தை முகமது மீரான், தம்பி அயூப்கான், சகோதரி சபீனா ஆகியோர் திண்டுக்கல்லில் இருந்து நேற்று திருப்பூர் போயம்பாளையத்திற்கு வந்தனர்.

பின்னர் அவர்கள் 4 பேரும் சலீம் முகமதுவை அவருடைய வீட்டில் வைத்து சந்தித்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த ஷபிபுல்லா உள்ளிட்ட 4 பேரும் வீட்டில் இருந்த கிரிக்கெட் மட்டையால் சலீம் முகமதுவின் தலையில் ஓங்கி அடித்துள்ளனர். இதில் பலத்த காயமடைந்து கீழே சாய்ந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தடுக்க வந்த மும்தாஜூம் படுகாயமடைந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த ஷபிபுல்லா மற்றும் அவருடைய குடும்பத்தினர் 4 பேரும் அங்கிருந்து உடனடியாக தப்பிச் சென்றனர்.

4 பேரை பிடிக்க 3 தனிப்படை

இதுகுறித்து அனுப்பர்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் சலீம் முகமதுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து அனுப்பர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த கொலை சம்பவத்தில் தலைமறைவான 4 பேரை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

குடும்பத்தகராறு குறித்து பேச வந்த மருமகன் குடும்பத்தினர் இறைச்சி கடைக்காரரை கிரிக்கெட் மட்டையால் அடித்துக்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story