மேட்டூரில் பயங்கரம்: 17 வயது சிறுவன் அடித்துக்கொலை-தப்பி ஓடிய கொலையாளிகள் 2 பேருக்கு எலும்பு முறிவு


மேட்டூரில் 17 வயது சிறுவன் அடித்துக்கொலை செய்யப்பட்டான். கொலையாளிகள் 2 பேர் தப்பி ஓடிய போது அவர்களுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது.

சேலம்

மேட்டூர்:

இந்த பயங்கர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

17 வயது சிறுவன்

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள கொளத்தூர் கோவிந்தபாடி பகுதியை சேர்ந்தவர் செந்தில். இவருடைய மகன் பொக்கிஷ் (வயது 17). இவன் 10-ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெறவில்லை. இதனால் மேட்டூர் கருமலைக்கூடல் பகுதியில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கி டூடோரியல் காலேஜில் 10-ம் வகுப்பு தேர்வை மீண்டும் எழுத படித்து வந்தான். மேலும் கூலி வேலைக்கும் பொக்கிஷ் செல்வது வழக்கம்.

இந்த நிலையில் கடந்த 27-ந் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற பொக்கிஷ் வீடு திரும்பவில்லை. இது குறித்த புகாரின் பேரில் கருமலைக்‌கூடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பொக்கிஷை தேடி வந்தனர். இந்த நிலையில் மேட்டூர் அணையின் உபரிநீர் செல்லும் பாதையின் அருகில் பொக்கிஷ் பிணமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேட்டூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

தகராறு

தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் தெரியவந்தன. பொக்கிஷ் வேலைக்கு சென்ற இடத்தில் கருமலைக்கூடல் பகுதியை சேர்ந்த வெல்டிங் தொழிலாளி கவின் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அப்போது அவர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில், கவினின் தாயாரை பொக்கிஷ் தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த கவின், பொக்கிஷை தாக்கியுள்ளார்.

இதைத்தொடர்ந்து பொக்கிஷ் தனது நண்பரான கார்த்திக் என்பவரை அழைத்து வந்து கவினை மிரட்டி உள்ளார். உடனே கவின், தனது நண்பர் ரவிச்சந்திரனுக்கு தகவல் கொடுத்தார். இதைத்தொடர்ந்து அவர் தனது நண்பர்கள் ஆனந்த், கார்த்திக், சதீஷ், கோபி ஆகிய 4 பேருடன் மேட்டூர் வந்தார்.

கொலை

அவர்கள் பொக்கிஷ், கார்த்திக்கை மேட்டூர் அணையின் உபரிநீர் வெளியேறும் பாதை அருகே அழைத்து சென்று அடித்து உதைத்துள்ளனர். பின்னர் அவர்கள் கார்த்திக்கை மிரட்டி அனுப்பிவிட்டு, பொக்கிஷை மீண்டும் தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த பொக்கிஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான்.

உடனே கவினின் நண்பர்கள் பொக்கிஷின் உடலை உபரி நீர் செல்லும் பாதையில் தூக்கி எறிந்து விட்டு தப்பி சென்று விட்டனர். இதையறிந்த போலீசார் ஆனந்த் (22), கோபி (22) ஆகியோரை கைது செய்தனர்.

எலும்பு முறிவு

தொடர்ந்து கார்த்திக் (24), சதீஷ் (22) ஆகியோரை போலீசார் கைது செய்ய முயன்ற போது அவர்கள் மோட்டார் சைக்கிளில் தப்ப முயன்றனர். இதில் கீழே விழுந்ததில் கார்த்திக்கிற்கு கை எலும்பு முறிந்தது, சதீசிற்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அவர்கள் 2 பேரையும் போலீசார் மேட்டூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தொடர்ந்து கருமலைக்கூடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து, இந்த கொலையில் தொடர்புடைய ரவிச்சந்திரன், கவின் உள்பட மேலும் சிலரை தேடி வருகிறார்கள்.

மேட்டூரில் 17 வயது சிறுவன் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story