சேந்தமங்கலம் அருகே மகனை கிணற்றில் வீசி கொன்று இளம்பெண் தற்கொலை செய்தது ஏன்? போலீஸ் விசாரணையில் உருக்கமான தகவல்கள்


சேந்தமங்கலம் அருகே மகனை கிணற்றில் வீசி கொன்று இளம்பெண் தற்கொலை செய்தது ஏன்? என்பது குறித்து போலீஸ் விசாரணையில் உருக்கமான தகவல்கள் வெளியாகி உள்ளது.

நாமக்கல்

சேந்தமங்கலம்:

சேந்தமங்கலம் அருகே மகனை கிணற்றில் வீசி கொன்று இளம்பெண் தற்கொலை செய்தது ஏன்? என்பது குறித்து போலீஸ் விசாரணையில் உருக்கமான தகவல்கள் வெளியாகி உள்ளது.

இளம்பெண்

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே உள்ள மின்னாம்பள்ளி கொண்டப்ப நாயக்கனூரை சேர்ந்தவர் சரவணன் (வயது 30). இவர் நாமக்கல் பகுதியில் உள்ள ஒரு தனியார் வங்கியில் உதவியாளராக பணியாற்றி வந்தார். இவருடைய மனைவி கீதா (22). இவர்களுக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதியினருக்கு ரித்வின் யாதவ் (3) என்ற மகன் இருந்தான்.

இந்த நிலையில் கொரோனா நோய் பாதிப்பால் கடந்த ஆண்டு சரவணன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் கீதா மனவேதனையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. கணவர் வீட்டில் இருந்தால் மனவேதனை அதிகரிக்கும் என்பதால் கீதா வளையப்பட்டியில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். மேலும் அவர் கல்வியியல் கல்லூரியில் ஆசிரியர் பயிற்சி படித்து வந்தார்.

விசாரணை

இந்த நிலையில் நேற்று முன்தினம் கொண்டப்பநாயக்கனூருக்கு மகனுடன் சென்ற கீதா அங்குள்ள விவசாய கிணற்றில் மகனை தூக்கி வீசி கொன்று விட்டு தானும் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் உடனடியாக சேந்தமங்கலம் போலீசார் மற்றும் நாமக்கல் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று கிணற்றில் இறங்கி தாய், மகன் உடல்களை மீட்டு மேலே கொண்டு வந்தனர்.

பின்னர் போலீசார் 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

கணவர் வீடு

விசாரணையில் உருக்கமான தகவல்கள் வெளியாகி உள்ளது. கொண்டப்பநாயக்கனூரில் நேற்று முன்தினம் பட்டாளம்மன் கோவில் பண்டிகை நடந்தது. இதனால் கீதாவின் மாமனார் ரங்கசாமி வளையப்பட்டிக்கு சென்று மருமகள், பேரனை கொண்டப்ப நாயக்கனூருக்கு அழைத்து வந்தார். அப்போது கீதா தான் கணவருடன் மகிழ்ச்சியாக வாழ்ந்த வீட்டை வேதனையுடன் பார்த்து சென்றதாக தெரிகிறது.

இதையடுத்து கீதா மகன் ரித்விக் யாதவை தூக்கி கொண்டு அண்ணா நகர் பகுதியில் உள்ள விவசாய கிணற்றுக்கு சென்றார். பின்னர் கணவர் இறந்ததை நினைத்து வருந்திய அவர் ஒரு விபரீத முடிவை எடுத்தார். பின்னர் மகன் ரித்விக் யாதவை முதலில் கிணற்றில் வீசி கொன்று விட்டு பின்னர் தானும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.

சோகம்

கணவர் இறந்ததால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த இளம்பெண் தனது ஆசிரியை கனவை கலைத்து விட்டு மகனை கிணற்றில் வீசி கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story