வெண்ணந்தூரில், மகளின் கள்ளக்காதலனை ஏவி ஆட்டோ டிரைவர் அடித்துக்கொலை மாமியார் உள்பட 3 பேர் கைது


வெண்ணந்தூரில், மகளின் கள்ளக்காதலனை ஏவி  ஆட்டோ டிரைவர் அடித்துக்கொலை  மாமியார் உள்பட 3 பேர் கைது
x
தினத்தந்தி 17 Sept 2022 12:15 AM IST (Updated: 17 Sept 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

வெண்ணந்தூரில் மகளின் கள்ளக்காதலனை ஏவி ஆட்டோ டிரைவர் அடித்துக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவருடைய மாமியார் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

நாமக்கல்

வெண்ணந்தூர்:

வெண்ணந்தூரில் மகளின் கள்ளக்காதலனை ஏவி ஆட்டோ டிரைவர் அடித்துக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவருடைய மாமியார் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த கொலை சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

ஆட்டோ டிரைவர்

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் சர்க்கார் தோப்பு பகுதியை சேர்ந்தவர் மாதவன். இவருடைய மகன் அருள்மணி (வயது 30). ஆட்டோ டிரைவர். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ஜோதிலட்சுமி (26) என்பவருக்கும் திருமணமாகி நித்ரன் (5), அகிலன் (3) என்ற 2 மகன்கள் உள்ளனர். அருள்மணிக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது.

இதனால் ஜோதிலட்சுமி அடிக்கடி கணவரிடம் கோபித்து கொண்டு அவருடைய தாய் ஜானகி (49) வீட்டுக்கு சென்று விடுவார். இவ்வாறு ஜோதிலட்சுமி தனது தாய் வீட்டுக்கு சென்றபோது அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் மணிகண்டன் என்பவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டது. இதையறிந்த அருள்மணி, தனது மனைவியை கண்டித்தார். இதனால் ஜோதிலட்சுமி மீண்டும் தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.

மது குடித்தனர்

இந்த நிலையில் மகளுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்த மருமகன் அருள்மணி மீது மாமியார் ஜானகி கோபத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் இதுகுறித்து மகளின் கள்ளக்காதலன் மணிகண்டனிடம் கூறி வந்ததாக தெரிகிறது. இதற்கிடையே மகளின் வாழ்க்கையை நினைத்து வருந்திய ஜானகி, மருமகன் அருள்மணியை கொலை செய்ய முடிவு செய்தார்.

இதற்காக மகளின் கள்ளக்காதலன் மணிகண்டன் உதவியை நாடினார். இதையடுத்து அவர்கள் கொலைக்கான திட்டம் தீட்டினர். அதன்படி மணிகண்டன், அவருடைய நண்பர் லோகேஸ்வரன் (23) ஆகியோர் அருள்மணியை மது குடிக்க அங்குள்ள ஏரிக்கரையோர பகுதிக்கு அழைத்து சென்றனர். பின்னர் அங்கு 3 பேரும் அமர்ந்து மது குடித்தனர்.

பரிதாப சாவு

அப்போது போதையில் இருந்த அருள்மணியை கற்கள் மற்றும் மதுபாட்டிலால் தலையில் சரமாரியாக தாக்கி அடித்து விட்டு 2 பேரும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இதில் பலத்த காயம் அடைந்த அருள்மணி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

அந்த வழியாக சென்றவர்கள் இதனைப் பார்த்து உடனடியாக வெண்ணந்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் ராசிபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், வெண்ணந்தூர் இன்ஸ்பெக்டர் ஹேமாவதி ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். இதையடுத்து அருள்மணியின் உடலை பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மாமியார் உள்பட 3 பேர் கைது

இதற்கிடையே போலீசாரின் விசாரணையில், மணிகண்டன், லோகேஸ்வரன் ஆகியோர் அருள்மணியை அடித்துக்கொலை செய்ததும், இதற்கு உடந்தையாக ஜானகி இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அந்த பகுதியில் பதுங்கி இருந்த மணிகண்டன், லோகேஸ்வரன் மற்றும் மாமியார் ஜானகி ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மகளின் கள்ளக்காதலனை ஏவி மருமகனை மாமியார் கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story