ஈரோட்டில் பயங்கரம்: மதுபோதை தகராறில் அண்ணன் கொலை; வாலிபர் கைது


ஈரோட்டில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் அண்ணனை கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு

ஈரோடு

ஈரோட்டில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் அண்ணனை கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

தாயை கொன்றவர்கள்

ஈரோடு சூரம்பட்டி கஸ்தூரிபாய் வீதியை சேர்ந்தவர் கணேசன். இவருடைய மனைவி சரோஜா. இவர்களுக்கு விக்னேஷ் (வயது 29), அருண்குமார் (25) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். இதில் விக்னேஷ் டிரைவராக வேலை செய்து வந்தார். அருண்குமார் கட்டிட தொழிலாளியாக உள்ளார்.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கணேசன் இறந்துவிட்டார். கடந்த 2020-ம் ஆண்டு ஏற்பட்ட குடும்ப தகராறில் விக்னேசும், அருண்குமாரும் சேர்ந்து தாய் சரோஜாவை கொலை செய்தனர். இந்த கொலை வழக்கு சூரம்பட்டி போலீஸ் நிலையத்தில் நிலுவையில் உள்ளது. விக்னேஷ், அருண்குமார் ஆகியோர் கஸ்தூரிபாய் வீதியில் முதல்மாடியில் உள்ள ஒரு வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வந்தனர். அவர்களுக்கு மதுகுடிக்கும் பழக்கம் உண்டு.

கைகலப்பு

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு அண்ணன், தம்பி 2 பேரும் வீட்டில் மது அருந்தி கொண்டு இருந்தனர். அப்போது வீட்டு வாடகை கொடுப்பது தொடர்பாக 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. இது கைகலப்பில் முடிந்தது. இருவரும் ஒருவரையொருவர் தாக்கி கொண்டதாக தெரிகிறது. அப்போது அருண்குமார் தனது அண்ணன் விக்னேஷை பலமாக தாக்கினார். இதில் முகத்தில் ரத்த காயம் ஏற்பட்டதால் அவர் அங்கேயே மயங்கி விழுந்தார். இதையடுத்து குடிபோதையில் இருந்த அருண்குமாரும் வீட்டிலேயே தூங்கினார்.

நேற்று காலையில் அருண்குமார் எழுந்து பார்த்தபோது விக்னேஷ் இறந்து கிடந்தார். இதையடுத்து அவர் அங்கிருந்து தப்பி ஓடினார். அதன்பிறகு விக்னேஷை சந்திக்க நண்பர் ஒருவர் வந்து பார்த்தபோது, அவர் கொலை செய்யப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவர் ஈரோடு சூரம்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

தம்பி கைது

தகவல் கிடைத்ததும் ஈரோடு டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆனந்தகுமார் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். இதையடுத்து இறந்த விக்னேஷின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விக்னேஷை கொலை செய்த அருண்குமாரை கைது செய்தனர்.

ஈரோட்டில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் அண்ணனை தம்பி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story