பவானிசாகர் அருகே மதுகுடித்தவரை தட்டிக்கேட்டதால் தகராறு; மீனவர் படுகொலை- இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த 4 பேர் கைது
பவானிசாகர் அருகே மதுகுடித்தவரை தட்டிக்கேட்டதால் ஏற்பட்ட தகராறில் மீனவர் படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்தார்கள்.
பவானிசாகர்
பவானிசாகர் அருகே மதுகுடித்தவரை தட்டிக்கேட்டதால் ஏற்பட்ட தகராறில் மீனவர் படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்தார்கள்.
தகராறு
பவானிசாகர் கூலீஸ் லைனில் வசித்து வந்தவர் ராமு (வயது 33). மீனவர். இவர் கடந்த 3-ந் தேதி இரவு 11.30 மணி அளவில் பவானிசாகர் இலங்கை அகதிகள் முகாம் அருகே உள்ள மாந்தோப்பில் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தார். அப்போது அங்கு இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமை சேர்ந்த சஞ்சய் (21), மலைகண்ணன் (20), சாலுமணி (23), சத்யராஜ் (33), முகுந்தன் (38) ஆகியோர் வந்தனர். அவர்கள் ராமுவிடம், இங்கு எதற்கு வந்து மது அருந்துகிறாய்? என்று கேட்டதாக கூறப்படுகிறது. மேலும் ராமு பாக்கெட்டில் இருந்த 500 ரூபாய் பணத்தை சஞ்சய் எடுத்துள்ளார். இதனை ராமு தட்டிக்கேட்டார். இதனால் ராமுவுக்கும், அவர்களுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.
தாக்கினர்
இதில் ஆத்திரம் அடைந்த ராமு வீட்டுக்கு சென்று அரிவாளை எடுத்துக்கொண்டு மொபட்டில் அங்கு வந்தார். அப்போது அவரை அந்த பகுதியை சேர்ந்தவர்கள் தடுத்து நிறுத்தினர்.
இந்த நிலையில் ஆத்திரமடைந்த சஞ்சய், மலைக்கண்ணன் ஆகியோர் கீழே கிடந்த கட்டையை எடுத்து ராமுவை அடித்துள்ளனர். இதில் அவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் வலி தாங்க முடியாமல் அவர் சத்தம் போட்டார். இதனால் சஞ்சய், மலைக்கண்ணன், சாலுமணி, சத்யராஜ், முகுந்தன் ஆகிய 5 பேரும் அங்கிருந்து தப்பித்து ஓடிவிட்டனர். பின்னர் ராமுவை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தனியார் ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
சாவு
அதன்பின்னர் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.
இதுகுறித்து ராமுவின் மனைவி ரோகினி பவானிசாகர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் ராமு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை இறந்தார். இதைத்தொடர்ந்து போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து சஞ்சய், மலைக்கண்ணன், சாலுமணி, சத்யராஜ் ஆகிய 4 பேரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள முகுந்தனை போலீசார் வலை வீசி தேடி வருகிறார்கள்.