சத்தியமங்கலத்தில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கிணற்றில் பிணமாக மிதந்த விவசாயி- கொலையா? போலீசார் விசாரணை
சத்தியமங்கலத்தில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் விவசாயி கிணற்றில் பிணமாக மிதந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சத்தியமங்கலம்
சத்தியமங்கலத்தில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் விவசாயி கிணற்றில் பிணமாக மிதந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விவசாயி
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கெம்மநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் ராமசாமி (வயது 70). இவர் தனக்கு சொந்தமான நலத்தில் விவசாயம் செய்து வந்தார். இவருடைய மனைவி பருவதம்மாள் (67). இவர்களுக்கு சுப்பிரமணி, ராஜேந்திரன், சந்திரமூர்த்தி என்ற 3 மகன்கள் உள்ளார்கள்.
நேற்று முன்தினம் மாலை ராமசாமி தோட்டத்தில் உள்ள நாய்க்கு சாப்பாடு கொண்டு போய் வைத்துவிட்டு வருகிறேன் என்று கூறிவிட்டு சென்றார். அதன்பின்னர் அவர் திரும்பி வரவில்லை. இதையடுத்து பருவதம்மாள் இரவு 8 மணி அளவில் அவரை செல்போனில் தொடர்பு கொண்டார். அதற்கு அவர் 9 மணிக்கு வந்துவிடுகிறேன் என்றார். ஆனால் அதன்பின்னரும் அவர் வரவில்லை.
இதனால் பருவதம்மாள் மகன்களிடம் இதுபற்றி கூறி தோட்டத்துக்கு சென்று பார்த்து வரசொன்னார். அவர்கள் தோட்டத்தில் சென்று பார்த்தபோது அங்கு அவர் இல்லை.
கொலையா?
எதேச்சையாக அவர்கள் தோட்டத்து கிணற்றில் எட்டிப் பார்த்தார்கள். அப்போது தண்ணீரில் ராமசாமி பிணமாக மிதப்பது தெரிந்தது. பதறிப்போன அவர்கள் உடனே சத்தியமங்கலம் போலீசாருக்கு இதுபற்றி தகவல் கொடுத்தார்கள். அதன்பேரில் போலீசாரும், சத்தி தீயணைப்பு நிலைய வீரர்களும் அங்கு வந்தார்கள். அதன்பின்னர் கிணற்றில் இருந்து உடல் மேலே கொண்டுவரப்பட்டது.
அப்போது ராமசாமியின் கைகள் மற்றும் கால்கள் கட்டப்பட்டு இருந்தது தெரிந்தது. அதன்பிறகு உடல் பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
ராமசாமி தனக்கு தானே கை, கால்களை கட்டிக்கொண்டு கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்று சத்தியமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.