பனியன் நிறுவன கண்காணிப்பாளரை கத்தியால் குத்திக்கொலை


பனியன் நிறுவன கண்காணிப்பாளரை கத்தியால் குத்திக்கொலை
x

திருப்பூரில் பனியன் நிறுவன கண்காணிப்பாளரை கத்தியால் குத்திக்கொலை செய்த கொலையாளியை போலீஸ் வலைவீசி தேடி வருகின்றனர்.

திருப்பூர்

திருப்பூரில் பனியன் நிறுவன கண்காணிப்பாளரை கத்தியால் குத்திக்கொலை செய்த கொலையாளியை போலீஸ் வலைவீசி தேடி வருகின்றனர்.

இது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கத்திக்குத்து

திருப்பூர் 15 வேலம்பாளையத்தை அடுத்த எடிசன்நகர் பகுதியைச் சேர்ந்த ஒருவர், தனது வீட்டின் முன்பு ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு படுகாயத்துடன் கிடப்பதாக கூறினார். அதன் பேரில் 15 வேலம்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

ஆனால் அதற்குள் அக்கம்பக்கத்தினர் அந்த நபரை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலமாக திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர், அந்த நபர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.

பனியன் நிறுவன கண்காணிப்பாளர்

இதைத் தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், கத்திக்குத்துப்பட்டு இறந்தவர் திருமுருகன்பூண்டியை அடுத்த துரைசாமிநகரை சேர்ந்த கோபிகிருஷ்ணன் (வயது 39) என்பது தெரிய வந்தது. அவர் ஆஷர்நகர் பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் கண்காணிப்பாளராக வேலை பார்த்து வந்துள்ளார்.

கோபி கிருஷ்ணனுக்கு திருமணமாகி மனைவியை பிரிந்து தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். சம்பவத்தன்று இரவு கோபிகிருஷ்ணன் தனது தாயிடம் ஏ.டி.எம்.-ல் பணம் எடுத்து வருவதாக கூறி சென்றுள்ளார். இந்த நிலையில்தான் கோபிகிருஷ்ணன் கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார்.

கொலையாளிக்கு வலைவீச்சு

15 வேலம்பாளையம் போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோபி கிருஷ்ணன் இரவு நேரத்தில் திருமுருகன்பூண்டியில் இருந்து 15 வேலம்பாளையம் பகுதிக்கு ஏன் சென்றார் என்பது குறித்தும், அவருடன் செல்போனில் கடைசியாக பேசிய நபர் யார் என்பது தொடர்பாகவும் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக தனிப்படை அமைத்து கொலையாளியை போலீசார் தேடி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட கோபிகிருஷ்ணனின் சொந்த ஊர் கேரள மாநிலம் சித்தூர் ஆகும். திருப்பூரில் பனியன் நிறுவன கண்காணிப்பாளர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Related Tags :
Next Story