கல்லால் தாக்கி சுமை தூக்கும் தொழிலாளி படுகொலை; குளியலறையில் வழுக்கி விழுந்து இறந்ததாக நாடகமாடிய மகன் கைது


கல்லால் தாக்கி சுமை தூக்கும் தொழிலாளி படுகொலை; குளியலறையில் வழுக்கி விழுந்து இறந்ததாக நாடகமாடிய மகன் கைது
x

திண்டுக்கல்லில், கல்லால் தாக்கி சுமை தூக்கும் தொழிலாளி படுகொலை செய்யப்பட்டார். குளியலறையில் வழுக்கி விழுந்து அவர் இறந்ததாக நாடகமாடிய மகனை போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல்

திண்டுக்கல்லில், கல்லால் தாக்கி சுமை தூக்கும் தொழிலாளி படுகொலை செய்யப்பட்டார். குளியலறையில் வழுக்கி விழுந்து அவர் இறந்ததாக நாடகமாடிய மகனை போலீசார் கைது செய்தனர்.

தொழிலாளி சாவு

திண்டுக்கல் மேட்டுப்பட்டி அசனாத்புரத்தை சேர்ந்தவர் சையது அபுதாகிர் (வயது 75). சுமை தூக்கும் தொழிலாளி. அவருடைய மகன் ஹக்கீம் சேட் (33). தையல் தொழிலாளி.

இந்த நிலையில் நேற்று இரவு தலையில் பலத்த காயத்துடன், திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு சையது அபுதாகிரை அவருடைய குடும்பத்தினர் கொண்டு வந்தனர். அவர்களிடம் டாக்டர்கள் விசாரித்த போது, குளியலறையில் வழுக்கி விழுந்ததில் பலத்த காயமடைந்து மயக்கநிலைக்கு சென்றுவிட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து சையது அபுதாகிரை டாக்டர்கள் பரிசோதித்தனர். அப்போது அவர் ஏற்கனவே இறந்துபோனது தெரியவந்தது. பின்னர் அவருடைய உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்த தெற்கு போலீசார், அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து ஹக்கீம் சேட்டிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர்களிடம் குளியலறையில் வழுக்கி விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு இறந்ததாக ஹக்கீம் சேட் தெரிவித்துள்ளார்.

நாடகமாடியது அம்பலம்

இந்த நிலையில் இன்று காலையில் சையது அபுதாகிரின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருடைய தலையில் கல் அல்லது கூர்மையான ஆயுதத்தால் தாக்கியதற்கான அடையாளங்கள் இருப்பது டாக்டர்களுக்கு தெரியவந்தது.

இதையடுத்து தெற்கு போலீசாரிடம், டாக்டர்கள் அதுகுறித்து தெரிவித்தனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார் சையது அபுதாகிரின் மகனை பிடித்து துருவி, துருவி விசாரணை நடத்தினர்.

அப்போது, தலையில் கல்லால் தாக்கி தந்தையை அவரே கொன்றுவிட்டு குளியலறையில் வழுக்கி விழுந்ததில் படுகாயமடைந்து இறந்ததாக கூறி நாடகமாடியது அம்பலமானது.

மேலும் அவருடைய தந்தை தினமும் தனது குடும்பத்தினருடன் தகராறில் ஈடுபட்டு வந்ததாகவும், சம்பவத்தன்றும் அவர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறு முற்றியதால் ஆத்திரத்தில் வீட்டருகே கிடந்த கல்லை எடுத்து தந்தையின் தலையில் தாக்கியதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து ஹக்கீம் சேட்டை போலீசார் கைது செய்தனர். தந்தையின் தலையில் கல்லால் தாக்கி மகனே கொலை செய்த சம்பவம் திண்டுக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Related Tags :
Next Story