மூதாட்டியை கழுத்தை அறுத்து கொலை செய்து 5 பவுன் சங்கிலி கொள்ளை


மூதாட்டியை கழுத்தை அறுத்து கொலை செய்து 5 பவுன் சங்கிலி கொள்ளை
x

திருப்பூரில் அதிகாலையில் வீடு புகுந்து மூதாட்டியை கழுத்தை அறுத்து கொலை செய்து 5 பவுன் சங்கிலியை கொள்ளையடித்துச் சென்ற மர்ம ஆசாமியை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

திருப்பூர்

திருப்பூரில் அதிகாலையில் வீடு புகுந்து மூதாட்டியை கழுத்தை அறுத்து கொலை செய்து 5 பவுன் சங்கிலியை கொள்ளையடித்துச் சென்ற மர்ம ஆசாமியை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

இந்த துணிகர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

மூதாட்டி

திருப்பூர் எஸ்.வி. காலனி ஓம்சக்தி கோவில் ரோடு டி.எஸ்.ஆர். லே அவுட் 8-வது வீதியை சேர்ந்தவர் முத்துசாமி (வயது 76). ஓய்வு பெற்ற அரசு பள்ளி தலைமை ஆசிரியர். இவரது மனைவி சந்திராமணி (67). இவர்கள் கடந்த 20 ஆண்டுகளாக அப்பகுதியில் வசித்து வந்தனர். இவர்களது மகன் பூவேந்திரன். இவர் அணைக்காடு பகுதியில் வீடு கட்டி அங்கு குடியிருந்து கெமிக்கல் கடை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் நேற்று அதிகாலை சந்திராமணி எழுந்து வீட்டின் முன் கோலமிட்டு சமையலறையில் பணியில் ஈடுபட்டார். முத்துசாமி ஓர் அறையில் தூங்கிக்கொண்டிருந்தார். காலை 6 மணி அளவில் முத்துசாமி எழுந்து சமையலறைக்கு சென்றபோது அங்கு ரத்த வெள்ளத்தில் சந்திராமணி கொலை செய்யப்பட்டு கிடந்தார். அதை பார்த்து அவர் கதறி துடித்தார். சத்தம் கேட்டு அருகில் உள்ளவர்கள் ஓடி வந்து பார்த்தனர்.

5 பவுன் சங்கிலி கொள்ளை

இது குறித்து உடனடியாக திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மாநகர போலீஸ் கமிஷனர் பிரபாகரன், துணை கமிஷனர் வனிதா, கொங்கு நகர் உதவி கமிஷனர் அனில் குமார், வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயகுமார் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.

மேலும் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி விசாரித்தனர். விசாரணையில், அதிகாலையில் சந்திராமணி எழுந்து வாசலில் கோலமிட்டு விட்டு வீட்டுக்குள் சமையல் அறையில் இருந்துள்ளார். கதவு திறந்து இருந்த நிலையில் 55 வயது மதிக்கத்தக்க மர்ம ஆசாமி ஒருவர் நைசாக வீட்டுக்குள் புகுந்து கத்தியால் சந்திராமணியின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு அவர் அணிந்திருந்த 5 பவுன் தங்கச் சங்கிலியை கொள்ளையடித்துவிட்டு தப்பியது தெரியவந்தது.

பரபரப்பு

இதை தொடர்ந்து தடயவியல் நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்தனர். மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. இது குறித்து போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து மூன்று தனிப்படை அமைத்து கொலையாளியை தேடி வருகிறார்கள்.

முத்துசாமிக்கு தெரிந்தவர்கள் யாராவதுதான் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். அந்த கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். மேலும் சந்தேகத்துக்குரிய நபர் ஒருவரை தேடி தனிப்படை போலீசார் சேலம் விரைந்துள்ளனர்.

அதிகாலையில் வீடு புகுந்து மூதாட்டியை கழுத்தை அறுத்து கொலை செய்து மர்ம ஆசாமி நகையை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Related Tags :
Next Story