உத்தனப்பள்ளி அருகேதொழில் அதிபர் கொலை வழக்கில் 2 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனைஓசூர் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு
ஓசூர்:
உத்தனப்பள்ளி அருகே தொழில் அதிபர் கொலை வழக்கில் 2 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து ஓசூர் கோர்ட்டில் பரபரப்பு தீர்ப்பு கூறப்பட்டது.
தொழில் அதிபர்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் கணபதி நகரை சேர்ந்தவர் முனிராஜ் (வயது 60). தொழில் அதிபர். இவருக்கு சொந்தமான கல்குவாரி உத்தனப்பள்ளி அருகே உப்பர தம்மாண்டரபள்ளியில் உள்ளது.
இந்த நிலையில் கடந்த 2016-ம் ஆண்டு கல்குவாரிக்கு அருகில் உள்ள அவரது அறையில் முனிராஜ் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து உத்தனப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் அதே ஊரை சேர்ந்த பசுபீரப்பா மகன் சீனிவாசன் (39) மற்றும் உல்லியப்பா மகன் நாகராஜ் (37) ஆகிய 2 பேர் இந்த கொலையை செய்தது தெரியவந்தது.
ஆயுள் தண்டனை
மேலும், தொழில் அதிபர் முனிராஜ் மற்றும் சீனிவாசன், நாகராஜ் தரப்பினருக்கு இடையே நிலப்பிரச்சினை இருந்து வந்தது. இதன் காரணமாக முன்விரோதத்தில் முனிராஜை வெட்டிக்கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது. இந்த கொலை வழக்கு ஓசூர் மாவட்ட கூடுதல் அமர்வு கோர்ட்டில் நடந்து வந்தது.
இந்த வழக்கில் விசாரணை முடிந்து நேற்று நீதிபதி ரோசலின் துரை தீர்ப்பு கூறினார். அதில் குற்றம்சாட்டப்பட்ட சீனிவாசன் மற்றும் நாகராஜூக்கு கொலை வழக்கிற்காக ஆயுள் தண்டனையும், ரூ.1,000 அபராதமும், அத்துமீறி நுழைந்த குற்றத்துக்காக ஆயுள் தண்டனையும், ரூ.1,000 அபராதமும் என 2 பேருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார். இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறியுள்ளார்.
தொழில் அதிபர் கொலை வழக்கில் 2 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து ஓசூர் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.