சிவகங்கை அருகே விவசாயி குத்திக்கொலை
சிவகங்கை அருகே விவசாயி குத்திக்கொலை செய்யப்பட்டார்
சிவகங்கை,
சிவகங்கை அருகே விவசாயி குத்திக்கொலை செய்யப்பட்டார்.
தகராறு
சிவகங்கை அருகே உள்ள வீர வலசை கிராமத்தை சேர்ந்தவர் முனியசாமி (வயது 35). விவசாயி. இவரது வீட்டின் அருகே மாரி என்பவரின் வீடு உள்ளது. நேற்று மாரி வீட்டில் உள்ள தென்னை மரத்தில் ஓலை வெட்டிய போது தென்னை மட்டை முனியசாமியின் வீட்டுக்கு செல்லும் மின்சா வயரில் விழுந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவருடைய வீட்டின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதாம். இதனால் ஆத்திரமடைந்த முனியசாமி மாரியின் மனைவி ஏலம்மாளிடம்(65) தகராறு செய்தாராம்.
இதைத் தொடர்ந்து ஏலம்மாள் சிவகங்கை தாலுகா போலீசில் புகார் செய்தார். இது தொடர்பாக சிவகங்கை தாலுகா போலீசார் இரு தரப்பினரையும் அழைத்து விசாரித்து சமரசம் செய்து அனுப்பியுள்ளனர்.
குத்திக்கொலை
இந்நிலையில் வீட்டிற்கு வந்ததும் மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த ஏலம்மாள் மற்றும் அவரது மகன் கோவிந்தசாமி (46) ஆகியோர் முனியசாமியை கத்தியால் குத்தியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த முனியசாமியை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிவகங்கை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி முனியசாமி பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக சிவகங்கை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.