முதியவரை அடித்துக்கொன்ற கொத்தனாரை அடையாளம் காட்டிய போலீஸ் மோப்ப நாய்
முதியவரை கட்டையால் அடித்துக்கொன்ற கொத்தனாரை போலீஸ் மோப்ப நாய் அடையாளம் காட்டியது.
முதியவரை கட்டையால் அடித்துக்கொன்ற கொத்தனாரை போலீஸ் மோப்ப நாய் அடையாளம் காட்டியது.
முதியவர்
சிவகங்கை அருகே உள்ள சக்கந்தியை சேர்ந்தவர் பாலாஜி. இவர் சிங்கப்பூரில் பணிபுரிந்து வருகிறார்.
இவர் சிவகங்கையில், திருப்பத்தூர் ரோட்டில் அரசாணி முத்துப்பட்டி அருகில் இலுப்பைக்குடி என்ற இடத்தில் ஏற்கனவே பாதியாக கட்டப்பட்ட ஒரு வீட்டை விலைக்கு வாங்கி புதுப்பித்து வருகிறார். அந்த வீட்டில் தினசரி இரவில் அவரது அண்ணன் செல்வராஜ் (வயது 63) இருந்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவில் செல்வராஜ் அந்த வீட்டில் படுத்து இருந்தார். அவருக்கு துணையாக கொத்தனார் முருகன் (40) என்பவரும் இருந்தார்.
பிணமாக கிடந்தார்
நேற்று காலையில் முருகன் கட்டிடத்தின் உள்ளே தூங்கி கொண்டிருந்தார். செல்வராஜ் கட்டிடத்தின் வெளியே உள்ள மணலில் ரத்த காயத்துடன் இறந்து கிடந்தார். அதன் அருகில் கட்டை ஒன்று ரத்தக்கறையுடன் கிடந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ், சிவகங்கை நகர் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் கட்டிடத்தின் உள்ளே படுத்து தூங்கிய முருகனை எழுப்பி விசாரணைக்கு அழைத்து செல்வதற்காக போலீஸ் வாகனத்தில் ஏற்றினர்.
மோப்ப நாய் கண்டுபிடித்தது
இதற்கிடையே சம்பவ இடத்திற்கு போலீஸ் மோப்ப நாய் லைக்கா கொண்டுவரப்பட்டது. அது செல்வராஜ் பிணமாக கிடந்த இடத்தில் இருந்து மோப்பம் பிடித்துவிட்டு, கட்டிடத்தை சுற்றி வந்தது. பின்பு கட்டிடத்திற்குள் மீண்டும் ஓடிச் சென்றுவிட்டு போலீஸ் வாகனத்தில் அமர்ந்திருந்த முருகனின் அருகில் சென்று அடையாளம் காட்டியது. இதைத்தொடர்ந்து போலீசார், முருகனை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தினர். அதில், இரவில் குடிபோதையில் செல்வராஜ் சத்தம் போட்டதாகவும், இதனால் ஆத்திரம் அடைந்த முருகன் அவரை கட்டையால் தாக்கி விட்டு தூங்க சென்றதாகவும் கூறப்படுகிறது.
கட்டையால் தாக்கியதில் தலையில் படுகாயம் அடைந்த செல்வராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகனை கைது செய்தனர்.