திருப்பத்தூர் அருகே பயங்கரம்:தாய்-மகன் அடித்துக்கொலை மர்ம ஆசாமிகளுக்கு போலீஸ் வலைவீச்சு
திருப்பத்தூர் அருகே மர்ம ஆசாமிகளால் தாய்-மகன் அடித்து கொலை செய்யப்பட்டனர்.
திருப்பத்தூர்,
திருப்பத்தூர் அருகே மர்ம ஆசாமிகளால் தாய்-மகன் அடித்து கொலை செய்யப்பட்டனர்.
தாய்-மகன்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே துவார் ஊராட்சிக்கு உட்பட்ட பூமாலை என்ற கண்மாய் பகுதி உள்ளது. இது துவார் கிராமத்தில் இருந்து 2 கி.மீ. தொலைவில் அமைந்து உள்ளது. இங்கு சாத்தையா மனைவி அடக்கி(வயது 60), தனது மூத்த மகன் சின்னகருப்பனுடன்(26) குடிசையில் வசித்து வந்தார். சாத்தையா ஏற்கனவே இறந்து விட்டார்.
கண்மாய் பகுதியில் தாயும், மகனும் மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாமல் வசித்து வந்தனர். தாயும், மகனும் கிடைத்த விவசாய வேலைக்கு சென்று அதில் கிடைக்கும் வருமானத்தில் வாழ்ந்து வந்தனர். சின்னகருப்பன் டிரைவராகவும் வேலை பார்த்து வந்துள்ளார். அதோடு அடக்கி 2 மாடுகள், 2 நாய்கள், வாத்துகள், கோழிகளை வளர்த்து வந்தார்.
அடக்கியின் மகள் பெரியகருப்பிக்கு மகிபாலன்பட்டியில் திருமணம் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. அவரது இளைய மகன் பூமிநாதன் (19) வேகுபட்டியில் தங்கி வேலை பார்த்து வருகிறார்.
அடித்துக்கொலை
இந்தநிலையில் நேற்று காலை அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் வேலை நிமித்தமாக சின்னகருப்பனை பார்க்க அவரது வீட்டிற்கு சென்றார். அப்போது அங்கு தாய்-மகன் இருவரும் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அக்கம்பக்கத்தினரிடம் அவர் தெரிவித்தார்.
தகவலறிந்த நெற்குப்பை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு கொலை நடந்த வீட்டை ஆய்வு செய்தனர். யாரோ மர்ம ஆசாமிகள் நள்ளிரவு நேரத்தில் தாய்-மகன் 2 பேரையும் அடித்து கொலை செய்துள்ளனர்.
கொலையான சின்னகருப்பன் கட்டிலிலும், அவரது தாயார் அடக்கி சமையல் செய்யும் இடத்திலும் பிணமாக கிடந்தனர். அவர்கள் இறந்து கிடந்த இடத்தில் 2 நாய்களும் அவர்களை பார்த்தப்படி படுத்திருந்தன.
மர்ம ஆசாமிகளுக்கு வலைவீச்சு
இதை தொடர்ந்து சிவகங்கையில் இருந்து கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு ஆய்வு நடத்தப்பட்டது. பின்னர் தாய்-மகன் ஆகிய இருவரது உடல்களும் கைப்பற்றப்பட்டு பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. நள்ளிரவு நேரத்தில் கண்மாய் பகுதியில் தங்கி இருந்த தாய்-மகன் ஆகிய 2 பேரையும் மர்ம ஆசாமிகள் கொலை செய்தது ஏன்? என போலீசார் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள். முன்விரோதம் காரணமா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என தெரியவில்லை.
இதுகுறித்து நெற்குப்பை போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் தலைமையில் போலீசார் வழக்குபதிவு செய்து கொலையாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.
இந்த இரட்டைக்கொலை சம்பவம் திருப்பத்தூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.