பள்ளி காவலாளி கழுத்தை நெரித்துக்கொலை? 5 வாலிபர்களை பிடித்து போலீசார் விசாரணை
பள்ளிபாளையம்:
பள்ளிபாளையத்தில் பள்ளி காவலாளி மர்மமாக இறந்து கிடந்த நிலையில், அவர் கழுத்தை நெரித்து கொலை செய்யபப்ட்டாரா? என 5 வாலிபர்களை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
காவலாளி கொலை?
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் காவேரி பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் இரவு காவலாளியாக பொன்னுசாமி (வயது 80) என்பவர் வேலை பார்த்து வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் காலை அவர் பள்ளியில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதனை பார்த்து பள்ளிக்கு வந்த ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த பள்ளிபாளையம் போலீசார் அங்கு விரைந்து சென்று, விசாரணை நடத்தினர். பின்னர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பள்ளிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மர்ம சாவு என வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
5 வாலிபர்கள் சிக்கினர்
பொன்னுசாமியின் உடலை ஆய்வு செய்ததில், அவருடைய கழுத்தில் காயங்கள் இருந்தது தெரியவந்தது. இதனால் அவரை மர்ம நபர்கள் கழுத்தை நெரித்து கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர். இதனிடையே அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் மர்ம நபர்கள் சிலர் அங்கு நடமாடியது தெரியவந்தது.
இதையடுத்து சந்தேகத்தின் பேரில் போலீசார் அதே பகுதியை சேர்ந்த 5 வாலிபர்களை பிடித்து, அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சிக்கிய வாலிபர்களிடம் திருச்செங்கோடு துணை போலீஸ் சூப்பிரண்டு மகாலட்சுமியும் விசாரணை நடத்தினார்.