அத்தையுடனான கள்ளத்தொடர்பை கைவிட மறுத்ததால் கட்டிட தொழிலாளி குத்திக்கொலை நண்பர் கைது


அத்தையுடனான கள்ளத்தொடர்பை கைவிட மறுத்ததால் கட்டிட தொழிலாளி குத்திக்கொலை நண்பர் கைது
x
தினத்தந்தி 4 July 2023 12:30 AM IST (Updated: 4 July 2023 11:21 AM IST)
t-max-icont-min-icon

அத்தையுடனான கள்ளத்தொடர்பை கைவிட மறுத்ததால்கட்டிட தொழிலாளி குத்திக்கொலைநண்பர் கைது செய்யப்படடனர்

நாமக்கல்

பரமத்திவேலூர்:

வேலகவுண்டம்பட்டி அருகே அத்தையுடன் உள்ள கள்ளத்தொடர்பை கைவிட மறுத்ததால் கட்டிட தொழிலாளியை சரமாரியாக குத்திக்கொலை செய்த நண்பர் கைது செய்யப்பட்டார்.

கள்ளத்தொடர்பு

நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டி அருகே அக்கலாம்பட்டி அருந்ததியர் காலனியை சேர்ந்த கந்தசாமி மகன் சீனு (வயது 23). அதே ஊரை சேர்ந்த சக்திவேல் மகன் பிரவீன்குமார் என்ற குணா (21). கட்டிட தொழிலாளர்களான 2 பேரும் நண்பர்கள் ஆவர். அதே பகுதியில் பிரவீன்குமாரின் தாய்மாமா சத்யா (35), அவருடைய மனைவி மீனா (29) ஆகியோர் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் பிரவீன்குமார் தனது தாய்மாமா வீட்டில் இருக்கும்போது அவரை பார்ப்பதற்காக சீனு அடிக்கடி அங்கு சென்று வந்ததாக கூறப்படுகிறது. அப்போது சீனுவிற்கும், மீனாவிற்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளத்தொடர்பாக மாறியது. இதனால் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்ததாக தெரிகிறது. இவர்களுடைய கள்ளத்தொடர்பு அப்பகுதியை சேர்ந்த பொதுமக்களுக்கு அரசல்புரசலாக தெரியவந்தது.

குத்திக்கொலை

இதனை அறிந்த பிரவீன்குமார் நண்பர் சீனுவை கண்டித்ததோடு, அத்தையுடனான கள்ளத்தொடர்பை கைவிடுமாறு கூறினார். ஆனால் சீனு கள்ளத்தொடர்பை கைவிடாமல் தொடர்ந்து மீனாவிடம் பேசி வந்தாராம். இதனால் ஆத்திரம் அடைந்த பிரவீன்குமார், சீனுவை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார்.

அதன்படி நேற்று முன்தினம் இரவு பிரவீன்குமார் கத்தியுடன் சீனுவின் வீட்டுக்கு சென்றார். பின்னர் அங்கு தூங்கி கொண்டிருந்த சீனுவை கத்தியால் சரமாரியாக குத்தினார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். இதையடுத்து பிரவீன்குமார் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

கைது

சீனு கொலை செய்யப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் வேலகவுண்டம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் சீனுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் கொலை செய்துவிட்டு தப்பியோடிய பிரவீன்குமாரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரவீன்குமாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். தாய்மாமன் மனைவியுடன் உள்ள கள்ளத்தொடர்பை கைவிட மறுத்த கட்டிட தொழிலாளியை நண்பரே குத்திக்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story