கொடைக்கானலில் உருட்டுக்கட்டையால் அடித்து தென்காசி வாலிபர் படுகொலை; இளம்பெண் உள்பட 5 பேர் கைது
கொடைக்கானலில், தென்காசி வாலிபர் மர்ம சாவில் திடீர் திருப்பமாக அவரை உருட்டுக்கட்டையால் அடித்துக்கொலை செய்த இளம்பெண் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
கொடைக்கானலில், தென்காசி வாலிபர் மர்ம சாவில் திடீர் திருப்பமாக அவரை உருட்டுக்கட்டையால் அடித்துக்கொலை செய்த இளம்பெண் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
இளம்பெண்ணுடன் பழக்கம்
தென்காசி சக்திநகரை சேர்ந்தவர் அய்யாத்துரை (வயது 60). இவர் நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மகன் சூர்யா (30). இவர் கொடைக்கானலில் சொந்தமாக நிலம் வாங்கி காட்டேஜ் கட்டும் முயற்சியில் ஈடுபட்டார். இதற்காக இவர் கடந்த 2 வருடங்களாக அவ்வப்போது கொடைக்கானலுக்கு வந்து சென்றார். கொடைக்கானலுக்கு வரும்போது சூர்யா, வழக்கமாக அங்குள்ள காட்டேஜில் தங்கி இருப்பது வழக்கம்.
அப்போது இவருக்கும், அதே பகுதியில் மற்றொரு காட்டேஜில் தங்கி இருந்த சென்னை கொட்டிவாக்கம் வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்த பிரபுதாஸ் என்பவரது மகள் சுவேதா என்ற கேரலின்(25) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் கொடைக்கானல் கல்லுக்குழி மலோனிகுடில் என்னுமிடத்தில், கடந்த 9 மாதங்களாக வாடகைக்கு வீடு எடுத்து ஒன்றாக வசித்து வந்தனர்.
மர்ம சாவு
இந்தநிலையில் சூர்யாவுக்கும், சுவேதாவுக்கும் கடந்த 1-ந்தேதி இரவு தகராறு ஏற்பட்டது. இதுதொடர்பாக சுவேதா, தனது ஆண் நண்பர்களுக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சுவேதாவின் நண்பர்கள் 4 பேர் அங்கு வந்தனர். பின்னர் அவர்கள் தகராறை விலக்கி விட்டனர். அப்போது திடீரென வீட்டின் படியில் இருந்து சூர்யா தவறி விழுந்ததாக கூறப்பட்டது. இதில் காயம் அடைந்த அவரை, சுவேதா தனது ஆண் நண்பர்களுடன் சேர்ந்து மீட்டு கொடைக்கானல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், ஏற்கனவே சூர்யா இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
ஆனால் சூர்யாவின் தலையில் ரத்தக்காயமும், கண், நெற்றி, உதடு ஆகிய இடங்களில் காயங்களும், வலது கையில் வெந்து போன காயமும், இடது பக்க கழுத்தில் நகக்கீறலும் இருந்தது.
இதனால் கொடைக்கானல் போலீசார் மர்மசாவு என வழக்குப்பதிவு செய்தனர். இதுதொடர்பாக சுவேதா மற்றும் அவரது ஆண் நண்பர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
உறவினர்கள் போராட்டம்
மேலும் கொடைக்கானலில் இறந்த சூர்யாவின் உடல் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. அதை அறிந்த சூர்யாவின் தந்தை அய்யாத்துரை மற்றும் உறவினர்கள், நண்பர்கள் நேற்று திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு வந்தனர். அங்கு சூர்யாவின் உடலை பார்த்து கதறி அழுதனர். இதற்கிடையே சூர்யாவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதையடுத்து உடலை வாங்கி செல்லும்படி போலீசார் கூறினர்.
ஆனால் சூர்யாவின் தலை உள்பட உடலின் பல்வேறு இடங்களில் காயங்கள் இருப்பதால், அவர் கொலை செய்யப்பட்டு இருக்கிறார். எனவே கொலை வழக்கு பதிவு செய்து கொலைக்கு காரணமான பெண் உள்பட 5 பேரையும் கைது செய்ய வேண்டும். அதுவரை உடலை வாங்க மாட்டோம் என்று உறவினர்கள், நண்பர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போலீஸ் சமரசம்
மேலும் அரசு ஆஸ்பத்திரியின் பின்வாசல் முன்பு மறியலில் ஈடுபட முயன்றனர். அதை அறிந்த கொடைக்கானல் போலீஸ் துணை சூப்பிரண்டு சீனிவாசன் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பேச்சுவார்த்தை நடந்தது.
எனினும் சூர்யாவின் உடலை வாங்க மறுத்து விட்டனர். சூர்யா கொலை செய்யப்பட்டதாக வழக்குப்பதிவு செய்து, 5 பேரையும் கைது செய்தால் மட்டுமே உடலை வாங்குவோம் என்று மருத்துவமனை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போலீசாரின் சமரச பேச்சு வீணானது. இந்த சம்பவத்தால் திண்டுக்கல் அரசு மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
திட்டமிட்டு கொலை
சூர்யாவின் தந்தை அய்யாத்துரை நிருபர்களிடம் கூறுகையில், எனது மகன் சூர்யா பிலிம் டெக்னாலஜி என்ஜினீயராக இருந்தார். கொடைக்கானலில் நிலம் வாங்கி காட்டேஜ் கட்டுவதற்காக 9 மாதங்களாக தங்கி இருந்தார். சூர்யாவிடம் தன்னை திருமணம் செய்யும்படி அந்த பெண் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளார். இதற்கு சூர்யா மறுத்தார். இதற்கிடையே கொடைக்கானலில் சூர்யா தங்கி இருப்பதை அறிந்த அந்த பெண், 4 பேருடன் அங்கு தேடி வந்தார்.
சூர்யா திருமணத்துக்கு மறுத்து விட்டதால் 5 பேரும் சேர்ந்து அவரை அடித்து கொலை செய்து இருக்கின்றனர். அடித்து கொன்றதற்கு அடையாளமாக சூர்யாவின் உடலில் காயங்கள் இருக்கின்றன. எனவே இது திட்டமிட்டு செய்யப்பட்ட படுகொலை ஆகும். கண்காணிப்பு கேமராவில் அனைத்தும் பதிவாகி இருக்கின்றன. ஆனால் போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து உள்ளனர். அதை கொலை வழக்காக பதிவு செய்ய வேண்டும். கொலைக்கு காரணமான 5 பேரையும் கைது செய்ய வேண்டும். அதுவரை சூர்யாவின் உடலை வாங்க மாட்டோம் என்று கண்ணீர் மல்க கூறினார்.
5 பேர் கைது
இதற்கிடையே கொடைக்கானலில் சுவேதா மற்றும் அவரது ஆண் நண்பர்களிடம், கொடைக்கானல் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அதில் சூர்யா அடித்துக்கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
சம்பவத்தன்று சூர்யாவுக்கும், சுவேதாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து தகராறை விலக்கிவிடுவதற்காக சுவேதா, தனது ஆண் நண்பர்களான கொடைக்கானல் வாழைக்காட்டு ஓடை பகுதியை சேர்ந்த அகில் ஹமீது (25), ஆனந்தகிரியை சேர்ந்த பராந்தகசோழன் (25), மும்பையை சேர்ந்த கவுதம் (31), நெல்லை மேலப்பாளையத்தை சேர்ந்த நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் (27) ஆகியோரை அழைத்தார். அதன்படி அங்கு வந்த 4 நண்பர்களும், சூர்யாவிடம் தகராறு குறித்து தட்டிக்கேட்டனர். இதில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு, தகராறாக மாறியது. அப்போது சூர்யாவை சுவேதா மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து உருட்டுக்கட்டையால் தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த சூர்யா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து, சுவேதா மற்றும் அவரது நண்பர்கள் அகில் ஹமீது, பராந்தகசோழன், கவுதம், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ஆகிய 5 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 கார்களை பறிமதல் செய்யப்பட்டது. இதுகுறித்து அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.