ஓரினச்சேர்க்கைக்கு மறுத்த நண்பன் கொலை: வாலிபருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை ரத்து


ஓரினச்சேர்க்கைக்கு மறுத்த நண்பன் கொலை: வாலிபருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை ரத்து
x

ஓரினச்சேர்க்கைக்கு மறுத்த நண்பனை கொலை செய்ததாக வாலிபருக்கு கீழ்கோர்ட்டு விதித்த ஆயுள் தண்டனையை ரத்து செய்து, அவரை விடுவித்து ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.

சென்னை,

கடலூர் மாவட்டம் தேவனாம்பட்டினத்தைச் சேர்ந்தவர் சதீஷ்குமார். கடந்த 2016-ம் ஆண்டு ஏப்ரல் 4-ந் தேதி தனது பள்ளித்தோழன் தினேசை சந்திக்கச் சென்ற இவர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து சதீஷ்குமாரின் தந்தையின் புகாரின் பேரில் நெல்லிக்குப்பம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

இதற்கிடையில் கிராம நிர்வாக அலுவலரிடம் தினேஷ் சரணடைந்தார். ஓரினச்சேர்க்கைக்கு சதீஷ்குமார் சம்மதிக்காததால் அவரை கொலை செய்துவிட்டதாக அவர் வாக்குமூலம் அளித்தார். கிராம நிர்வாக அலுவலர் அளித்த தகவலின் அடிப்படையில் அந்த வழக்கை கொலை வழக்காக போலீசார் மாற்றினர்.

ஆயுள் தண்டனை

இதில் எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை சட்டப்பிரிவும் சேர்க்கப்பட்டதால், துணை போலீஸ் சூப்பிரண்டு விசாரணைக்கு மாற்றப்பட்டது. அவர் விசாரித்து குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த கடலூர் முதன்மை செசன்சு கோர்ட்டு, கடந்த 2018-ம் ஆண்டு தினேசுக்கு ஆயுள் தண்டனை விதித்தது.

அதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் தினேஷ் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை நீதிபதிகள் பரேஷ் உபாத்தியாய், ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா ஆகியோர் விசாரித்தனர். அரசு தரப்பில் குற்றவியல் வக்கீல் பாபு முத்துமீரான், மனுதாரர் தரப்பில் வக்கீல் சி.பிரசன்ன வெங்கடேஷ் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.

சந்தர்ப்ப சூழ்நிலை சாட்சிகள்

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் பிறப்பித்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது:-

ஓரினச்சேர்க்கைக்கு சம்மதிக்கவில்லை என்பதற்காக இந்த கொலை நடந்துள்ளது என்று கொலைக்கான காரணமாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால் இந்த வழக்கு முழுவதும் சந்தர்ப்ப சூழ்நிலை சாட்சிகளை கொண்டதாகவே உள்ளது. கடைசியாக சதீஷ்குமார் தினேசுடன்தான் இருந்தார் என்ற கோட்பாட்டை போலீசார் முன்வைக்கின்றனர். கிராம நிர்வாக அலுவலரிடம் தினேஷ் சரணடைந்து அளித்த வாக்குமூலம், வீட்டுக்குப் பின்புறம் உடல் புதைக்கப்பட்டிருந்தது, பறிமுதல் செய்யப்பட்ட கத்தி இவற்றின் அடிப்படையில் தினேஷ் மீது போலீசார் குற்றம்சாட்டுகின்றனர்.

காய்கறி வெட்டும் கத்தி

ஆனால், கொலை செய்யப்பட்டவர் கடைசியாக யாரிடம் எல்லாம் செல்போனில் பேசினார் என்பதையும், அவர் பயன்படுத்திய மோட்டார்சைக்கிளையும் போலீசார் கண்டுபிடிக்கவில்லை. கொலை நடந்த நாளில் சதீஷ்குமாரும், தினேசும் மது அருந்தியுள்ளனர். ஓரினச்சேர்க்கைக்கு மறுத்ததால் போதையில் கொலை நடந்துள்ளது என்று போலீசார் கூறினாலும், பிரேத பரிசோதனை அறிக்கையில் மது அருந்தியதற்கான ஆதாரம் எதுவும் இல்லை.

பிரேத பரிசோதனை செய்த டாக்டர் அளித்த அறிக்கையில், உடலில் உள்ள காயம் இருபுறமும் கூர்மையான கத்தியால் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். ஆனால் போலீசார் பறிமுதல் செய்த கத்தி, ஒரு பக்கம் கூர்மையான, காய்கறி வெட்டும் கத்தியாகும்.

மகனுக்கு காதல்

மொத்தத்தில் இந்த வழக்கு, முன்னுக்குப் பின் முரணாக உள்ளது. கொலை செய்யப்பட்டவரின் பெற்றோர் தங்கள் மகனுக்கு மாற்றுசாதிப் பெண்ணுடன் காதல் இருந்தது என்று கூறியும் போலீசார் அதுகுறித்து விசாரிக்கவே இல்லை. முன்பின் தெரியாத வேறு கிராமத்தைச் சேர்ந்த கிராம நிர்வாக அலுவலரிடம் மனுதாரர் எப்படி சரணடைந்து வாக்குமூலம் அளித்தார்? சரணடைந்த தினேசை சம்பந்தமே இல்லாமல் வேறு ஒரு போலீஸ் நிலையத்தில் கிராம நிர்வாக அலுவலர் ஒப்படைத்தது ஏன்? பறிமுதல் செய்யப்பட்ட கத்தியில் முரண்பாடு என்று ஏராளமான குளறுபடிகள் உள்ளன.

ஆக, இந்தக் கொலையை தினேஷ்தான் செய்தார் என்பதை போலீசார் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கவில்லை. எனவே அவரை விடுதலை செய்கிறோம்.

இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.


Next Story