தலையில் கல்லை போட்டு வாலிபர் கொலை


தலையில் கல்லை போட்டு வாலிபர் கொலை
x
தினத்தந்தி 27 April 2023 6:45 PM GMT (Updated: 27 April 2023 6:47 PM GMT)

மதுரை பெரியார் பஸ் நிலையம் அருகே தலையில் கல்லை போட்டு வாலிபர் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக கோர்ட்டில் 4 பேர் சரண் அடைந்தனர்.

மதுரை

மதுரை பெரியார் பஸ் நிலையம் அருகே தலையில் கல்லை போட்டு வாலிபர் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக கோர்ட்டில் 4 பேர் சரண் அடைந்தனர்.

டிக்கெட் புரோக்கர்

மதுரை பெரியார் பஸ் நிலையம் அருகே உள்ள திடீர்நகர் பாஸ்கரதாஸ் நகரை சேர்ந்தவர் முகமது அலி. இவருடைய மகன் சதக் அப்துல்லா (வயது 29). தனியார் பஸ்சில் ஆட்களை அனுப்பி வைக்கும் டிக்கெட் புரோக்கராக செயல்பட்டு வந்தார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு இவர், சில வழக்குகளில் கைது செய்யப்பட்டவர் என கூறப்படுகிறது.

நேற்று முன்தினம் இரவு சதக் அப்துல்லா நண்பர்கள் சிலருடன் சேர்ந்து பெரியார் பஸ்நிலையம் அருகே ஒரு இடத்தில் மது குடித்தார். அப்போது அவருக்கும், அவருடன் மது குடித்தவர்களுக்கும் இடையே போதையில் தகராறு ஏற்பட்டது.

தலையில் கல்லை போட்டு கொலை

ஆத்திரம் அடைந்த அவர்கள் சதக்அப்துல்லாவை தாக்கினர். அப்போது போதையில் அவர் நிலை தடுமாறி கீழே விழுந்தார். உடனே அவர்கள் அங்கு கிடந்த பெரிய கல்லை எடுத்து சதக்அப்துல்லாவின் தலையில் போட்டனர். அதில் சம்பவ இடத்திலேயே அவர் ரத்த வெள்ளத்தில் பலியானார். பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பி விட்டனர். நள்ளிரவு நேரத்தில் கொலை நடந்ததால் சதக்அப்துல்லா கொலை செய்யப்பட்டதை யாரும் பார்க்கவில்லை.

இதற்கிடையே அதிகாலையில் ஒருவர் அங்கு வந்த போது ரத்த வெள்ளத்தில் ஒருவர் இறந்து கிடப்பதை பார்த்து திடீர்நகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

இன்ஸ்பெக்டர் காசிராஜன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சதக்அப்துல்லாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலையாளிகளை உடனடியாக பிடிக்க போலீஸ் கமிஷனர் நரேந்திரன்நாயர் உத்தரவிட்டார். அதன்பேரில் துணை கமிஷனர் சாய்பிரனீத் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் காசி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

4 பேர் கோர்ட்டில் சரண்

அவர்கள் கொலையாளிகளை தேடி வந்தனர். மேலும் போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அதில், 5 பேர் அந்த பகுதியில் சுற்றி திரிந்ததும், 4 பேர் மட்டும் அந்த பகுதியில் இருந்து ஓடுவதும் பதிவாகி இருந்தது. இதுதொடர்பாக சிலரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று போலீசார் விசாரித்தனர்.

இதற்கிடையே திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை கோர்ட்டில் சதக்அப்துல்லா கொலை வழக்கில் தொடர்புடைய கார்த்திக், சிவா, சரவணக்குமார், சந்துருகுமார் ஆகிய 4 பேர் சரண் அடைந்தனர். மேலும் கொலைக்கான காரணம் குறித்து போலீசாரிடம் கேட்டபோது, சரண் அடைந்தவர்களை காவலுக்கு எடுத்து விசாரித்தால் தான் கொலைக்கான பின்னணி என்வென்று தெரியவரும் என்று தெரிவித்தனர்.

பெரியார் பஸ் நிலையத்தின் பகுதியில் வாலிபர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story