கம்பத்தில் ஓசிக்கு ரொட்டி தர மறுத்த வியாபாரி அடித்துக்கொலை; சிறுவன் உள்பட 2 பேர் கைது


கம்பத்தில் ஓசிக்கு ரொட்டி தர மறுத்த வியாபாரி அடித்துக்கொலை செய்த சிறுவன் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

தேனி

கம்பத்தில் ஓசிக்கு ரொட்டி தர மறுத்த வியாபாரி அடித்துக்கொலை செய்த சிறுவன் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

வியாபாரி

தேனி மாவட்டம் கம்பம் பாரதியார் நகர், 6-வது தெருவை சேர்ந்தவர் சுருளிவேலு (வயது 52). இவருக்கு சுந்தரி என்ற மனைவியும், ஒரு மகள், ஒரு மகனும் உள்ளனர். சுருளிவேலு 3 சக்கர சைக்கிளில் ரொட்டி, கேக், பப்ஸ் உள்ளிட்ட உணவு பொருட்களை கம்பத்தில் வீதி, வீதியாக சென்று விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார்.

இந்தநிலையில் நேற்று வழக்கம்போல் சுருளிவேலு தனது 3 சக்கர சைக்கிளில் கம்பம் நகர் பகுதியில் வியாபாரம் செய்து கொண்டிருந்தார். இரவு 9 மணிக்கு மேல் அவர் கம்பம்மெட்டு காலனி பகுதிக்கு வந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் (வயது 19), அவரது நண்பரான 17 வயது சிறுவனும் சுருளிவேலுவிடம் 10 ரூபாயை கொடுத்து 3 பன்ரொட்டி கேட்டனர். அதற்கு அவர் ஒரு பன்ரொட்டி மட்டுமே தருவதாக கூறினார். இதனால் 2 பேரும் ஓசிக்கு பன்ரொட்டி கேட்டு சுருளிவேலுவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனை பார்த்த அப்பகுதி மக்கள், மணிகண்டனையும், சிறுவனையும் சமரசம் பேசி அனுப்பி வைத்தனர். பின்னர் சுருளிவேலு அப்பகுதியில் தொடர்ந்து வியாபாரம் செய்து கொண்டிருந்தார்.

அடித்துக்கொலை

ஆனால் சுருளிவேலுவை எப்படியாவது தாக்க வேண்டும் என்று மணிகண்டனும், சிறுவனும் திட்டம் போட்டனர். இதற்கிடையே சிறிது நேரத்தில் அப்பகுதியில் மழை பெய்தது. மேலும் அங்கு மின்தடையும் ஏற்பட்டது. இதனை சாதகமாக பயன்படுத்தி கொண்ட 2 பேரும் சேர்ந்து, அப்பகுதியில் கிடந்த உருட்டுக்கட்டையை எடுத்து சுருளிவேலுவை சரமாரியாக தாக்கி விட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் படுகாயம் அடைந்த சுருளிவேலு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதற்கிடையே அப்பகுதியில் மின்சாரம் மீண்டும் வந்தது. அப்போது அங்கு சுருளிவேல் இறந்துகிடப்பதை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக கம்பம் வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், சப்-இன்ஸ்பெக்டர் விஜய் ஆனந்த் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அப்போது சுருளிவேலுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

2 பேர் கைது

பின்னர் இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது கொலையாளிகள் தங்களது செருப்பை சம்பவ இடத்தில் விட்டுச்சென்றது தெரியவந்தது. அதனை துருப்புச்சீட்டாக பயன்படுத்தி, சுருளிவேலுவை கொலை செய்த மணிகண்டனையும், சிறுவனையும் மடக்கி பிடித்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

ஓசிக்கு ரொட்டி தர மறுத்ததால் வியாபாரியை அடித்துக்கொலை செய்த சம்பவம் கம்பத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Related Tags :
Next Story