முத்துப்பல்லக்கில் முருகன்-விநாயகர் வீதிஉலா


முத்துப்பல்லக்கில் முருகன்-விநாயகர் வீதிஉலா
x

தஞ்சையில் முத்துப்பல்லக்கில் விநாயகர்-முருகன் வீதிஉலா வந்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

தஞ்சாவூர்

தஞ்சாவூர்:

தஞ்சையில் முத்துப்பல்லக்கில் விநாயகர்-முருகன் வீதிஉலா வந்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

முத்துப்பல்லக்கு

தஞ்சை மாநகரில் திருஞானசம்பந்த மூர்த்தி சுவாமிகள் குருபூஜையையொட்டி முத்துப்பல்லக்கு விழா ஆண்டுதோறும் வைகாசி மாதம் நடைபெறும். இந்த விழாவின்போது தஞ்சையில் உள்ள பல்வேறு கோவில்களில் இருந்து விநாயகர், முருகன் ஆகியோர் முத்துப்பல்லக்கில் எழுந்தருளி 4 ராஜவீதிகளிலும் உலா வருவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு முத்துப்பல்லக்கு விழா நேற்று நடந்தது.

தஞ்சை மேலஅலங்கத்தில் உள்ள சுப்பிரமணியசாமி கோவிலில் காலையில் சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. இரவு வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியசாமி புஷ்பஅலங்காரத்தில் முத்துப்பல்லக்கில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

மின்விளக்குகள் அலங்காரம்

தஞ்சை சின்ன அரிசிகார தெருவில் உள்ள பாலதண்டாயுதபாணி கோவிலில் முத்து பல்லக்குவிழா நடந்தது. விழாவையொட்டி பாலதண்டாயுதபாணியும், விநாயகரும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட முத்து பல்லக்கில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். திருஞானசம்பந்தர் படமும் வைக்கப்பட்டு இருந்தது.

தஞ்சை மானம்புச்சாவடி விஜயமண்டப தெருவில் உள்ள ஜோதி விநாயகர் கோவிலில் மூலவர் விநாயகருக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, வெள்ளி கவசம் அணிவித்து பூஜை நடந்தது. இரவு விநாயகரும், திருஞானசம்பந்தரும் முத்துப்பல்லக்கில் எழுந்தருளினர். தெற்குவீதியில் உள்ள கமலரத்ன விநாயகர் கோவிலில் இருந்து முத்துப்பல்லக்கில் கமலரத்ன விநாயகரும் எழுந்தருளினர்.

கலைநயத்துடன் வடிவமைப்பு

இதேபோல் கீழவாசல் வெள்ளை பிள்ளையார்கோவிலில் இருந்து வெள்ளை பிள்ளையாரும், கீழவாசல் குறிச்சி தெருவில் உள்ள சுப்பிரமணியசாமி கோவிலில் இருந்து சுப்பிரமணியசாமியும், தஞ்சை ஆட்டுமந்தை அஞ்சல்காரத்தெருவில் உள்ள பாலதண்டாயுதபாணி கோவிலில் இருந்து பாலதாண்டாயுதபாணியும், திருஞானசம்பந்தரும் பல்லக்கில் எழுந்தருளினர்.

இதேபோல் தஞ்சை மாநகரில் உள்ள பல்வேறு கோவில்களில் இருந்து முத்துப்பல்லக்கில் விநாயகரும், முருகப்பெருமானும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பல்லக்குகள் பூக்களாலும், பல வண்ண காகிதங்களாலும், மின் விளக்குகளாலும் கலைநயத்துடன் வடிவமைக்கப்பட்டு இருந்தன.

திரளான பக்தர்கள் தரிசனம்

இந்த பல்லக்குகள் எல்லாம் தஞ்சை தெற்குவீதி, கீழவீதி, மேலவீதி, வடக்குவீதி ஆகியவற்றில் மேளதாளங்கள் முழங்க வலம் வந்தன. முத்துப்பல்லக்கு வீதிஉலா நேற்றுஇரவு தொடங்கி இன்று (வியாழக்கிழமை) அதிகாலை வரை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story