முஸ்லிம் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்


முஸ்லிம் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 5 Dec 2022 6:45 PM GMT (Updated: 6 Dec 2022 4:14 PM GMT)

பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி நாகர்கோவிலில் முஸ்லிம் அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி நாகர்கோவிலில் முஸ்லிம் அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

த.மு.மு.க. ஆர்ப்பாட்டம்

பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி நேற்று தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக குமரி மாவட்ட கிளை சார்பில் சிறுபான்மையினர் வழிபாட்டு உரிமை பாதுகாப்பு பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நாகர்கோவில் வேப்பமூடு பகுதியில் உள்ள மாநகராட்சி பூங்கா முன்பு நடந்தது.

ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சுல்பிக்கர் தலைமை தாங்கினார். த.மு.மு.க. தலைமை பிரதிநிதி வக்கீல் நூர்தீன், பச்சைத் தமிழகம் கட்சி மாநில தலைவர் சுப.உதயகுமாரன், மாவட்ட செயலாளர் சுலைமான், விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட செயலாளர் திருமாவேந்தன், வாழ்வுரிமைக் கட்சி மாநில துணை தலைவர் சுரேஷ் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

மனிதநேய மக்கள் கட்சி செயலாளர் பீர்முகைதீன், மாவட்ட பொருளாளர் பீர் முகம்மது, துணைச் செயலாளர் சகாபுதீன் மற்றும் பீர் முகமது உள்பட பலர் கலந்து கொண்டனர். கிளை தலைவர் ஷேக்செய்யது அலி நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பெண்கள் கோரிக்கை பதாகைகளை கையில் ஏந்தியவாறு கலந்து கொண்டனர். கண்டன கோஷங்களும் எழுப்பப்பட்டது.

எஸ்.டி.பி.ஐ. கட்சி

இதேபோல் பாபர் மசூதி இடிப்பை எதிர்த்தும், வழிபாட்டு தலங்களை பாதுகாக்க வலியுறுத்தியும் நாடு முழுவதும் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன்பும் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. குமரி மாவட்ட தலைவர் சத்தார் அலி தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள், தொகுதி, நகர, கிளை தலைவர்கள் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் ஜாபர் அலி வரவேற்று பேசினார். மாவட்ட துணை தலைவர் ஜாஹிர் உசேன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கட்சியின் வர்த்தக அணி மாநில பொது செயலாளர் ஜாபர் அலி உஸ்மானி, பச்சை தமிழகம் மாநில தலைவர் சுப.உதயகுமாரன், நாம் தமிழர் கட்சியின் மாநில பேச்சாளர் ஹிம்லர், எஸ்.டி.பி.ஐ. மாவட்ட பொது செயலாளர் மணவை சாதிக் அலி ஆகியோர் கண்டன உரையாற்றினர். நாகர்கோவில் மாநகர தலைவர் மீரான் மைதீன் தங்கப்பா நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


Next Story