கோவில் திருவிழாவில் பங்கேற்ற முஸ்லிம்கள்


கோவில் திருவிழாவில் பங்கேற்ற முஸ்லிம்கள்
x

கோவில் திருவிழாவில் பங்கேற்ற முஸ்லிம்கள் பங்கேற்றனர்.

பெரம்பலூர்

வேப்பந்தட்டை:

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள வி.களத்தூரில் கோவில்கள் மற்றும் பள்ளி வாசல்களில் திருவிழா நடைபெறும் சமயங்களில், ஏதேனும் ஒரு பிரச்சினை உருவாகி சட்டம், ஒழுங்கு சீர்கெடும் நிலை ஏற்பட்டு வந்தது. இதைத்தொடர்ந்து மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா, போலீஸ் சூப்பிரண்டு மணி, வருவாய் கோட்டாட்சியர் நிறைமதி மற்றும் அதிகாரிகள், 2 சமூக பெரியவர்களையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதில் உடன்பாடு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இஸ்லாமிய சமுதாயம் சார்பில் நடைபெற்ற சந்தனக்கூடு விழாவில் கலந்து கொள்ள, கோவில் நிர்வாகிகளை ஜமாத் நிர்வாகிகள் அழைத்தனர். அதன்படி சந்தனக்கூடு விழாவில் இந்துக்கள் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் தற்போது லட்சுமி நாராயண பெருமாள் வகையறா கோவில்களான மாரியம்மன், செல்லியம்மன், ராயப்பர் சுவாமி கோவில்களில் திருவிழா நடத்த இந்து சமுதாய மக்கள் முடிவு ெசய்தனர். இதைத்தொடர்ந்து கோவில் நிர்வாகிகள் நேரில் சென்று, ஜமாத் நிர்வாகிகளை திருவிழாவிற்கு வருமாறு அழைப்பு விடுத்தனர்.

இதைத்தொடர்ந்து நேற்று செல்லியம்மனுக்கு குடியழைத்தல் நிகழ்ச்சியும், பொங்கல் வைத்து மாவிளக்கு பூஜையும் நடைபெற்றது. இரவில் சுவாமி வீதி உலா, வாண வேடிக்கையுடன் நடைபெற்றது. இதில் இந்து மற்றும் முஸ்லிம் சமுதாய மக்கள் கலந்து கொண்டு சமூக நல்லிணக்கத்தை கடைபிடித்தனர். ேமலும் இதில் கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர். திருவிழாவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாரியம்மனுக்கு பக்தர்கள் அலகு குத்துதல், அக்னி சட்டி எடுத்தல், பால்குடம் எடுத்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. நாளை(திங்கட்கிழமை) மஞ்சள் நீராட்டு விழாவுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

திருவிழாவையொட்டி நேற்று காலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணி தலைமையில் 400-க்கும் மேற்பட்ட போலீசார் பங்கேற்ற கொடி அணிவகுப்பு நடைபெற்றது. இதில் ேபாலீசார் வி.களத்தூரில் முக்கிய வீதிகளின் வழியாக அணிவகுத்து சென்றனர்.


Next Story