நெல்லையில் முஸ்லிம்கள் பக்ரீத் சிறப்பு தொழுகை


நெல்லையில் முஸ்லிம்கள் பக்ரீத் சிறப்பு தொழுகை
x

பக்ரீத் பண்டிகையையொட்டி நெல்லையில் முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை நடத்தினார்கள்.

திருநெல்வேலி

ஈகை திருநாளான பக்ரீத் பண்டிகை நேற்று முஸ்லிம் மக்களால் கொண்டாடப்பட்டது. இதையொட்டி நெல்லை மாநகரில் 70-க்கும் மேற்பட்ட இடங்களிலும், மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான இடங்களிலும் சிறப்பு தொழுகைகள் நடைபெற்றது. இதற்காக முஸ்லிம் மக்கள் அதிகாலை நேரத்திலேயே புத்தாடை அணிந்து புறப்பட்டனர். தொழுகையை முடித்துவிட்டு ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர்.

நெல்லை மேலப்பாளையம் ஜின்னா திடலில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க பொறுப்பாளர் டி.பி.எம்.மைதீன்கான், அப்துல் வகாப் எம்.எல்.ஏ., மேலப்பாளையம் பகுதி தி.மு.க செயலாளர் துபை சாகுல், முகமது அலி மற்றும் ஆயிரக்கணக்கான முஸ்லிம் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் திரளாக கலந்து கொண்டு தொழுகை நடத்தினர்.

மேலப்பாளையம் விரிவாக்கம் பகுதி கரீம் நகர் மஸ்ஜித் ஹுதா பள்ளி வாசல் சார்பில், மதீனா சி.பி.எஸ்.சி பள்ளி மைதானத்தில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. பள்ளிவாசல் தலைவர் சாகுல் ஹமீது உஸ்மானி உரை ஆற்றினார். இதில் எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு தியாகத்திருநாள் வாழ்த்து தெரிவித்தார். நிகழ்ச்சியில் பள்ளிவாசல் நிர்வாகிகள் முஸ்தபா ஜாபர் அலி, ஜவஹர், தாவுத் ஹாஜியார், முஸ்தபா, ஜெய்னுல்ஆபிதீன், எஸ்.டி.பி.ஐ. கட்சி பொதுச் செயலாளர் எஸ்.எஸ்.ஏ.கனி, லெப்பை, கல்வத், சலீம் தீன், சிந்தா உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், இஸ்லாமிய பிரசார பேரவை சார்பில் மேலப்பாளையம் அல்லாமா இக்பால் பஜார் திடலில் ஹஜ் பெருநாள் தொழுகை நடைபெற்றது. இஸ்லாமிய பிரசார பேரவை மாநில செயலாளர் அப்துல் காதர் மன்பஈ, பெருநாள் தொழுகையை நடத்தி குத்பா உரையாற்றினார். தொழுகையில் த.மு.மு.க மற்றும் மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவரும், கவுன்சிலருமான ரசூல் மைதீன், மாவட்ட பொருளாளர் தேயிலை மைதீன், மாநில இளைஞர் அணி பொருளாளர் ரியாசுர் ரகுமான், மருத்துவ சேவை அணி துணை செயலாளர் பெஸ்ட் ரசூல், துணை செயலாளர் காஜா, பகுதி தலைவர் யூசுப் சுல்தான், செயலாளர்கள் அப்துல் காதர், பாதுஷா, பொருளாளர் அசன் மைதீன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

நெல்லை பேட்டை முகமது நயினார் பள்ளிவாசலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணை தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான கோதர் முகைதீன், பேட்டை ஜமாத் தலைவர் திவான் பக்கீர் முகைதீன், ரகுமான் பேட்டை ஹனிபா, வக்கீல் மதார் முகைதீன், மேலப்பாளையம் நைனார் முகமது மூப்பன் ஜும்ஆ பள்ளியில் ஜலீல் உஸ்மானி தலைமையில் நடைபெற்ற தொழுகையில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் மீரான் முகைதீன், ஹாமீம் பள்ளிவாசலில் முன்னாள் எம்.எல்.ஏ. வி.எஸ்.டி.சம்சுல் ஆலம், கவுன்சிலர் முகைதீன் அப்துல் காதர், நெல்லை டவுன் பாட்டப்பத்து பள்ளிவாசலில் மாவட்டச் செயலாளர் முகமது அலி, முகமது கடாபி ஆகியோர் தொழுகையில் கலந்து கொண்டனர்.

மேலப்பாளையம் மாநகராட்சி ஈத்கா திடலில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் ஹஜ் பெருநாள் தொழுகை நடைபெற்றது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாநில மேலாண்மை குழு தலைவர் சம்சுல்லுஹா ரஹ்மானி பெருநாள் தொழுகையை நடத்தி சொற்பொழிவு நிகழ்த்தினார். இதில் மாநில செயலாளர் செய்யது அலி, நெல்லை மாவட்ட தலைவர் மசூத் உஸ்மானி, பொருளாளர் சாந்து உமர், துணை செயலாளர் சிராஜ், மஸ்ஜிதுர் ரகுமான், கிளை தலைவர் அஷ்ரப் அலி, செயலாளர் இம்ரான் உள்பட ஏராளமான ஆண்கள், பெண்கள், குழந்தைகள் கலந்து கொண்டார்கள்.

இதே போல் நெல்லை டவுன் பகுதிக்கு உட்பட்ட பள்ளிவாசல்களில் முஸ்லிம்கள் பக்ரீத் தொழுகையை நிறைவேற்றினர். தவ்ஹீத் ஜமாத் சார்பில் டவுன் லாலுகாபுரம் பகுதி திடலில் நடைபெற்ற தொழுகையில் வெளிநாடு வாழ் தமிழர் நலச்சங்க மாவட்ட தலைவர் டவுன் ஜாபர் உள்பட பலர் கலந்து கொண்டார். மாவட்ட பேச்சாளர் சித்திக் தொழுகையை நடத்தினார்.

இதேபோல் மாவட்டம் முழுவதும் நேற்று பக்ரீத் சிறப்பு தொழுகை நடைபெற்றது. பக்ரீத் தினத்தன்று ஏழை, எளியோருக்கு உதவிகள் வழங்குவது வழக்கம் ஆகும். அந்த வகையில் நேற்று பல்வேறு இடங்களில் ஜமாத்தார்கள், அரசியல் பிரமுகர்கள், தொழில் அதிபர்கள் குர்பானி எனப்படும் ஆடு, மாடு இறைச்சி மற்றும் அரிசி, பணம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.


Next Story