பக்ரீத் பண்டிகையையொட்டி முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை


பக்ரீத் பண்டிகையையொட்டி முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை
x

கரூர் மாவட்டத்தில் பக்ரீத் பண்டிகையையொட்டி முஸ்லிம்கள் சிறப்பு தொழுைகயில் ஈடுபட்டனா்.

கரூர்

சிறப்பு தொழுகை

முஸ்லிம்களின் முக்கிய பண்டிகைகளில் பக்ரீத் பண்டிகையும் ஒன்றாகும். நாடு முழுவதும் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதையொட்டி ஈக்தா மைதானம், மசூதிகளில் சிறப்பு கூட்டுத்தொழுகை நடைபெற்றது. கரூர் மாவட்டத்தில் உள்ள முஸ்லிம்கள் காலையில் எழுந்து குளித்து விட்டு புத்தாடை அணிந்து ஈத்கா மைதானம், மசூதிகளுக்கு சென்று சிறப்பு தொழுகை நடத்தினார்கள்.

அரவக்குறிச்சி அருகே உள்ள பள்ளப்பட்டியில் உள்ள ஈத்கா மைதானத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் திரண்டு சிறப்பு தொழுகை நடத்தினார்கள். தொழுகை முடிந்தவுடன் முஸ்லிம்கள் ஒருவருக்கொருவர் கட்டித்தழுவியும், கைகளை குலுக்கியும் பக்ரீத் வாழ்த்துகளை பரிமாறி கொண்டனர். பின்னர் அவர்கள் தங்கள் பகுதிகளில் உள்ள உறவினர்கள், ஏழை, எளிய மக்கள், அக்கம், பக்கத்தில் வசிப்பவர்களுக்கு பிரியாணி வழங்கி அன்பை வெளிப்படுத்தினார்கள்.

இதேபோல் அரவக்குறிச்சி ஈத்கா மைதானத்தில் ஆயிரத்திற்கும் ேமற்பட்ட முஸ்லிம்கள் திரண்டு சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

கரூர்

இதேபோல் கரூர்-கோவை ரோட்டில் உள்ள ஈத்கா பள்ளிவாசலில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் சிறுவர்கள் உள்பட 500-க்கும் மேற்பட்ட ஆண்கள் திரண்டு சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.திருமாநிலையூரில் மைதானத்தில் தமிழ்நாடு தவ்ஹாத் ஜமாத் சார்பில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில், ஆண்கள்-பெண்கள் பலர் கொண்டனர்.கரூர் பெரிய பள்ளிவாசல், புலியூர் பள்ளிவாசல், சின்ன பள்ளிவாசல் உள்ளிட்ட அனைத்து பள்ளிவாசலிலும் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

வேலாயுதம்பாளையம்

வேலாயுதம்பாளையம் ஜன்னத்துல்பீர் தென்ஸ் பள்ளி வாசலில் 50-க்கு மேற்பட்டோர் தொழுகையில் ஈடுபட்டனர். பின்னர் தொழுகை முடிந்தவுடன் நண்பர்கள், உறவினர்களை கட்டி தழுவி பக்ரீத் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர்.இதேபோல் புகழூர், காகிதபுரம் குடியிருப்பு, கட்டிப்பாளையம், தோட்டக்குறிச்சி பகுதிகளில் உள்ள பள்ளி வாசல்களிலும் சிறப்பு தொழுகை நடந்தது.

பாதுகாப்பு

பக்ரீத் பண்டிகையையொட்டி கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.கரூர் மாவட்டத்தில் உள்ள மசூதிகள், ஈத்கா மைதானங்களையும் போலீசார் கண்காணித்தனர்.


Next Story