வெளிமாநில தொழிலாளர்களின் விவரங்களை இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்
நாமக்கல் மாவட்டத்தில் பணிபுரியும் வெளிமாநில தொழிலாளர்களின் விவரங்களை தொழிலாளர் நலத்துறை இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என கலெக்டர் ஸ்ரேயாசிங் உத்தரவிட்டு உள்ளார்.
செயல்திட்ட கூட்டம்
நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட அளவிலான குழந்தை தொழிலாளர் தடுப்பு படை செயல் திட்ட கூட்டம் கலெக்டர் ஸ்ரேயாசிங் தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில் கலெக்டர் பேசும்போது கூறியதாவது:-
நாமக்கல் மாவட்டத்தில் குழந்தை மற்றும் வளரிளம் பருவத் தொழிலாளர் தடுத்தல் மற்றும் முறைப்படுத்துதல் சட்டத்தின் கீழ் கடைகள், நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், செங்கல் சூளைகள், டெக்ஸ்டைல்ஸ், நூற்பு ஆலைகள் மற்றும் கோழிப்பண்ணைகளில் இதுவரை 199 ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
21 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு
இந்த ஆய்வுகளில் 14 வயது நிறைவடையாத 21 குழந்தை தொழிலாளர்கள், 18 வயது நிறைவடையாத 17 வளரிளம் பருவத்தினர் கண்டறியப்பட்டு மீட்கப்பட்டுள்ளனர். இவர்களை பணிக்கு அமர்த்திய 21 நிறுவனங்களின் உரிமையாளர்கள் மீது குழந்தை தொழிலாளர் மற்றும் வளரிளம் பருவத் தொழிலாளர் தடுத்தல் மற்றும் முறைப்படுத்துதல் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
அவ்வாறு பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் 12 வழக்குகள் முடிவுற்று ரூ.2 லட்சத்து 86 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து குழந்தை தொழிலாளர்கள் தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். மேலும் கொத்தடிமை தொழிலாளர்கள் தொடர்பாகவும் தொடர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை நாமக்கல் மாவட்டத்தில் 95 கொத்தடிமை தொழிலாளர்கள் மீட்கப்பட்டு அவர்களுக்கு கொத்தடிமை தொழிலாளர் மறுவாழ்வு நிதி வழங்கப்பட்டு உள்ளது.
வெளிமாநில தொழிலாளர்கள்
நாமக்கல் மாவட்டத்தில் பணிபுரியும் வெளி மாநிலத் தொழிலாளர்களின் விவரங்களை தொழிலாளர் துறைக்கான http://labour.tn.gov.in/ism என்ற வலை தளத்தில் அனைத்து கோழிப்பண்ணை உரிமையாளர்கள் மற்றும் பிற நிறுவன உரிமையாளர்கள் பதிவு செய்ய வேண்டும். இது தொடர்பாக தொழிலாளர் துறை அலுவலர்கள் கோழிப்பண்ணை மற்றும் பிற நிறுவனங்களை அணுகும் பொழுது உரிய ஒத்துழைப்பை வழங்குமாறும், இவ்வலைதளத்தில் பதிவு செய்யாமல் வெளி மாநிலத் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தும் நிறுவனங்களின் மீது மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இக்கூட்டத்தில் தொழிலாளர் இணை ஆணையர் (ஈரோடு) ரமேஷ், நாமக்கல் உதவி கலெக்டர் மஞ்சுளா, தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) திருநந்தன், துணை போலீஸ் சூப்பிரண்டு லட்சுமணன் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.