தேர்வில் வெற்றி பெற்று வாழ்வில் முன்னேறி செல்ல வேண்டும்

காவலர்கள் தேர்வில் வெற்றி பெற்று வாழ்வில் முன்னேறி செல்ல வேண்டும் என்று பயிற்சி பட்டறை முகாமில் வேலூர் சரக போலீஸ் டி.ஐ.ஜி. ஆனிவிஜயா கூறினார்.
வேலூர்
காவலர்கள் தேர்வில் வெற்றி பெற்று வாழ்வில் முன்னேறி செல்ல வேண்டும் என்று பயிற்சி பட்டறை முகாமில் வேலூர் சரக போலீஸ் டி.ஐ.ஜி. ஆனிவிஜயா கூறினார்.
காவலர்களுக்கு பயிற்சி பட்டறை
வேலூர் மாவட்ட காவல்துறை, நியூபேஸ் பவுண்டேஷன் சார்பில் வேலூர் சரகத்தில் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு எழுத உள்ள போலீசாருக்கு வெற்றி நிச்சயம் சிறப்பு பயிற்சி பட்டறை வேலூர் கோட்டை சுற்றுச்சாலையில் உள்ள காவலர் நல்வாழ்வு மன்றத்தில் நடந்தது. வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுந்தரமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட ஆண், பெண் காவலர்கள் கலந்து கொண்டனர்.
வேலூர் சரக போலீஸ் டி.ஐ.ஜி. ஆனிவிஜயா தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி பயிற்சி பட்டறையை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:-
வாழ்வில் முன்னேறி செல்ல வேண்டும்
தமிழகத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்களுக்கான எழுத்துத்தேர்வு அடுத்த மாதம் (ஜூன்) 25-ந் தேதி நடைபெற உள்ளது. 1,444 பணியிடங்களுக்கு 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து உள்ளனர். வேலூர் சரகத்தில் 1,500 பேர் தேர்வு எழுத உள்ளனர். இதில் போட்டிகள் அதிகம் உள்ளது. போட்டிகளை எதிர்கொள்ள தனித்திறமை அவசியம். தேர்வில் வெற்றி பெறும் வகையில் சிறப்பாக போலீசார் தயாராக வேண்டும். பயிற்சி பட்டறையில் தேர்வு தொடர்பாக கூறும் பயிற்சிகளை கவனித்தால் தேர்வு எளிதாக இருக்கும்.
அனைவரிடமும் ஏதாவது ஒரு திறமை இருக்கும். உங்கள் திறமையை நீங்கள் தான் வெளிப்படுத்தி கொள்ள வேண்டும். ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் முன்னேற திருப்புமுனை தேவைப்படும். அந்த திருப்புமுனையாக இந்த சப்-இன்ஸ்பெக்டர் தேர்வை பயன்படுத்தி கொள்ள வேண்டும். இந்த தேர்வில் வெற்றி பெற்று அடுத்தடுத்து பதவிகளுக்கு சென்று வாழ்வில் முன்னேறி செல்ல வேண்டும்.
தேர்வு எழுதும் காவலர்கள் வெற்றி பெற்று சப்-இன்ஸ்பெக்டர் பதவிக்கு வந்தால் மக்களுக்கு நல்ல முறையில் சேவை செய்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. எனவே நீங்கள் நன்கு பயிற்சி பெற்று தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்பதே எனது ஆசை.
இவ்வாறு டி.ஐ.ஜி. பேசினார்.
இதில் பட்டிமன்ற பேச்சாளர் மணிகண்டன், நியூபேஸ் பவுண்டேஷன் தலைவர் சங்கர் மற்றும் சுப்பிரமணி ஆகியோர் தேர்வுக்கு தயாராவது, தேர்வு நுணுக்கங்கள் பற்றி காவலர்களுக்கு பயிற்சி அளித்தனர்.