லாலாபேட்டை அருகே அனுமதியின்றி வைக்கப்பட்ட முத்தரையர் சிலை பறிமுதல்


லாலாபேட்டை அருகே அனுமதியின்றி வைக்கப்பட்ட முத்தரையர் சிலை பறிமுதல்
x

லாலாபேட்டை அருகே அனுமதியின்றி வைக்கப்பட்ட முத்தரையர் சிலையை வருவாய் துறையினர் பறிமுதல் செய்தனர்.

கரூர்

முத்தரையர் சிலை பறிமுதல்

கரூர் மாவட்டம், லாலாபேட்டை அருகே உள்ள வேங்காம்பட்டியை சேர்ந்தவர் தங்கதுரை (வயது 30). இவர் தனது பாட்டிக்கு சொந்தமான நிலத்தில் முத்தரையர் சிலை வைத்து திறப்பு விழாவை, வருகிற 28-ந்தேதி நடத்துவதாக அழைப்பிதழ் அச்சடித்து அதற்கான பணிகளை தொடங்கி செய்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று முத்தரையர் சிலையை நிறுவி உள்ளார். இது குறித்து அப்பகுதி கிராம நிர்வாக அதிகாரி முரளிதரன், லாலாபேட்டை போலீசில் புகார் கொடுத்தார்.அதன்பேரில் குளித்தலை ஆர்.டி.ஒ. புஷ்பாதேவி, கிருஷ்ணராயபுரம் தாசில்தார் முருகன் மற்றும் லாலாபேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் அனுமதியின்றி வைக்கப்பட்ட முத்தரையர் சிலை மற்றும் சிங்கம் சிலையை பறிமுதல் செய்தனர். பின்னர் கிருஷ்ணராயபுரம் தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு சென்று கருவூலத்தில் பத்திரமாக வைத்துள்ளனர். இந்த சம்பவம் அ்பபகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

அனுமதி பெற வேண்டும்

இதுகுறித்து வருவாய்த்துறையினர் கூறுகையில், கடந்த ஆண்டே முத்தரையர் சிலை வைக்க முயற்சி செய்துள்ளனர். இதுகுறித்து தாலுகா அலுவலகத்தில் நடந்த பேச்சுவார்த்தையில், முத்தரையர் சிலை வைக்க வருவாய்த்துறை மூலம் அனுமதி கொடுக்க முடியாது, நீதிமன்றத்திற்கு சென்று உத்தரவு பெற்று வந்தால் சிலை வைக்க அனுமதிக்க முடியும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில் அனுமதியின்றி மீண்டும் சிலை வைத்ததால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றனர்.


Next Story