"அக்னிபத் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும்"-முத்தரசன் பேட்டி


அக்னிபத் திட்டத்தை மத்திய அரசு  கைவிட வேண்டும்-முத்தரசன் பேட்டி
x

“அக்னிபத் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும்” என்று இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் கூறினார்

திருநெல்வேலி

வள்ளியூர்:

"அக்னிபத் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும்" என்று இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் கூறினார்.

மாவட்ட மாநாடு

நெல்லை மாவட்டம் வள்ளியூரில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் 24-வது மாவட்ட மாநாடு நடந்தது. இதில் அக்கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

நாட்டில் மக்களுடைய பிரச்சினை ஏராளமாக புதர்போல் மண்டி கிடக்கிறது. குறிப்பாக விலைவாசி பன்மடங்கு உயர்ந்து உள்ளது. அதே நேரத்தில் வருமானம் என்பது இருந்த நிலையிலேயே இருக்கிறது, அல்லது அதற்கும் குறைவாக இருக்கிறது. வேலை இல்லா திண்டாட்டம் நாளுக்கு நாள் விஸ்வரூபம் எடுத்து வருகிறது.

அக்னிபத் திட்டம்

அக்னிபத் திட்டத்தின் மூலம் இளைஞர்களின் எதிர்காலத்தை பாதிப்பது மட்டுமின்றி, பா.ஜ.க. உள்நோக்கத்துடன் இதை செயல்படுத்துகிறது. எல்லோரும் இந்த திட்டத்தை கடுமையாக எதிர்த்து வருகிறார்கள். எனவே அக்னிபத் திட்டத்தை உடனடியாக மத்திய அரசு கைவிட வேண்டும்.

மதரீதியான மோதலை உருவாக்குவதில் ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க. தீவிரமான முயற்சிகளை மேற்கொள்கிறார்கள். அதன் ஒரு பகுதி தான் நபிகள் நாயகம் குறித்து அவதூறாக அந்த கட்சியின் செய்தி தொடர்பாளர் பேசியுள்ளார். மதமோதலை உருவாக்கி மக்களை பிளவுபடுத்தி அதன் மூலமாக தங்களுடைய குறுகிய அரசியல் ஆதாயத்தை பெறுவதற்கான நடவடிக்கையில் மத்திய பா.ஜனதா அரசு ஈடுபட்டு இருக்கிறது.

எங்களுடைய மாநில மாநாடு ஆகஸ்டு 6-ந் தேதி தொடங்கி 4 நாட்கள் திருப்பூரில் நடைபெற இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story