கொளப்பள்ளியில் முத்துமாரியம்மன் கோவில் திருவிழா-பறவைக்காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்
கொளப்பள்ளியில் முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி பறவைக்காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
பந்தலூர்
கொளப்பள்ளியில் முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி பறவைக்காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
தேர்த்திருவிழா
பந்தலூர் அருகே கொளப்பள்ளி பாடசாலைவீதியில் பிரசித்தி பெற்ற முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் தேர்த்திருவிழா கடந்த மாதம் 23-ந்தேதி முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. 27 -ந்தேதி அதிகாலை 4 மணிக்கு கணபதி ஹோமம் நடைபெற்றது. காலை 10 மணிக்கு கொடிஏற்று விழா, 10.30 மணிக்கு ஸ்ரீமுத்துமாரியம்மனுக்கு காப்புகட்டுதல், நடைபெற்றது. மாலை 4 மணிக்கு ஏலமன்னா நீர்தேக்கத்தில் அம்மனின் குடிஅழைப்பு நடந்தது. கரகம் ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தது.
28 -ந் தேதி காலை 6 மணிக்கு அம்மனுக்கு தீபாராதனையும் சிறப்பு பூஜையும் நடைபெற்றது. 29-ந் தேதி அதிகாலை 5 மணிக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் மாலை 3 மணிக்கு அம்மனின் திருதேர் ஊர்வலம் கோவிலிருந்து புறப்பட்டு மாதேஸ்வரர் கோவில் பாரதநகர் மாங்கமூலா கொளப்பள்ளிபஜார் மற்றும் அய்யப்பன்கோவில் பேக்டரிமட்டம் குறிஞ்சிநகர் முருகன் கோவில் உள்பட பலபகுதிகளுக்கு சென்று பக்தர்களுக்கு அம்மன் அருள்பாலித்து மீண்டும் இரவு கோவிலை வந்தடைந்தது.
பறவைக்காவடி எடுத்து நேர்த்திக்கடன்
இதையடுத்து மழவன்சேரம்பாடி நீர்தேக்கத்திலிருந்து பால்காவடி பறவைகாவடி கத்தி காவடி அக்கினி காவடி ஊர்வலம் நடந்தது. இந்த ஊர்வலம் குறிஞ்சிநகர், பேக்டரிமட்டம் கொளப்பள்ளிபஜார் வழியாக கோவிலை வந்தடைந்தது. அங்கு பூமிதித்தல் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பறவைக்காவடி எடுத்தும், தீ மிதித்தும் நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். நேற்று முன்தினம் காலை 8 மணிக்கு மாவிளக்கு பூஜை நடைபெற்றது. காலை 11 மணிக்கு அம்மனின் கரகம் ஊரை சுற்றி வந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து இருந்தனர்.