முத்துமாரியம்மன் கோவில் பங்குனி தேரோட்டம்
இலுப்பூர் அருகே இருந்திரப்பட்டி முத்துமாரியம்மன் கோவில் பங்குனி தேரோட்டம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்தனர்.
முத்துமாரியம்மன் கோவில்
இலுப்பூர் அருகே உள்ள இருந்திரப்பட்டியில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு கடந்த மாதம் 19-ந்தேதி பூச்சொரிதல் விழா நடைபெற்றது. இதைத்தொடர்ந்து கடந்த 26-ந்தேதி பங்குனி தேரோட்டம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து விழா நாட்களில் தினமும் முத்துமாரியம்மன் காலையிலும், மாலையிலும் வீதியுலா வந்தார். நேற்று முன்தினம் பால்குடம் ஊர்வலமும், தீச்சட்டி ஏந்திச்செல்லுதல், அலகு நேர்ச்சை, கரும்பு தொட்டில் கட்டுதல், மாவிளக்கு, பொங்கல் வைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
விழாவின் சிகர நிகழ்ச்சியான பங்குனி தேரோட்டம் நேற்று நடந்தது. இதையொட்டி சிறப்பு அலங்காரத்தில் முத்துமாரியம்மனை தேரில் எழுந்தருள செய்தனர்.
தேரை வடம் பிடித்தனர்
இதையடுத்து மாலை 5 மணிக்கு மேள, தாளம் முழங்க, வாணவேடிக்கையுடன் திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்தனர். தேர் முக்கிய வீதிகளின் வழியாக அசைந்தாடி வந்தது. ஒவ்வொரு வீதியிலும் பக்தர்கள் கூடிநின்று தேங்காய், பூ, பழம் வைத்து முத்துமாரியம்மனுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர். இரவு 7 மணியளவில் தேர் நிலையை வந்தடைந்தது. பின்னர் முத்துமாரியம்மனுக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் இலுப்பூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தேரோட்டத்தையொட்டி சிறுவர், சிறுமிகள் முதல் பெரியவர்கள் வரை சிவன், முருகன், அம்மன் ஆகிய சாமி வேடங்களில் கோவிலுக்கு வந்திருந்தனர். தேரோட்டத்தையொட்டி பால்குடம் மற்றும் காவடி எடுத்தும், அலகு குத்தியும் பக்தர்கள் கோவிலுக்கு ஊர்வலமாக வந்து, நேர்த்திக்கடனை செலுத்தினர். விழாவுக்கு வந்த பக்தர்களுக்கு பல்வேறு அமைப்பினர் சார்பில் நீர்மோர், அன்னதானம் வழங்கினர். விழாவுக்கான ஏற்பாடுகளை விழா குழுவினரும், ஊர் பொதுமக்களும் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸ் துணை சூப்பிரண்டு காயத்திரி தலைமையில் இலுப்பூர் போலீசார் செய்திருந்தனர்.
சந்தனக்காப்பு அலங்காரம்
திருவரங்குளம் அருகே உள்ள இம்னாம்பட்டி முத்து மாரியம்மன் கோவில் பங்குனி திருவிழாவையொட்டி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து அம்பாளுக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்து மகாதீபம் காட்டப்பட்டது. முன்னதாக பக்தர்கள் விரதம் இருந்து அலகு குத்தி பால்குடம், காவடி எடுத்தனர். பெண்கள் அதிகாலை முளைப்பாரி எடுத்து வந்து குளக்கரையில் வைத்து வழிபாடு செய்தனர். இரவு கிடா வெட்டி பூஜை நடைபெற்றது. இதேபோல் அருகே உள்ள தேத்தாம்பட்டி முத்து மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பக்தர்கள் விரதம் இருந்து பால்குடம், காவடி எடுத்தனர். பின்னர் பக்தர்கள் கிடா வெட்டி வேண்டுதலை நிறைவேற்றினர்.