முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம்


முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம்
x

வயலோகம் முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

புதுக்கோட்டை

அன்னவாசல்:

முத்துமாரியம்மன் கோவில்

அன்னவாசல் அருகே வயலோகத்தில் முத்துமாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில் ஆகும். இக்கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்தாண்டும் திருவிழா கடந்த 22-ந்தேதி காப்புகட்டுதலுடன் தொடங்கியது. அதைதொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் ஒவ்வொரு நாளும் மண்டகப்படிதாரர்கள் சார்பில் பல்வேறு வாகனங்களில் அம்மன் வீதிஉலா நடைபெற்றது.

தேரோட்டம்

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான வைகாசி தேரோட்டம் இன்று நடந்தது. இதையொட்டி சிறப்பு அலங்காரத்தில் முத்துமாரியம்மன் திருத்தேரில் எழுந்தருளினார். இதையடுத்து மாலை 3 மணிக்கு மேள, தாளம் முழங்க, வாணவேடிக்கையுடன் திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

தேர் முக்கிய வீதிகளின் வழியாக அசைந்தாடி வந்தது. ஒவ்வொரு வீதியிலும் பக்தர்கள் கூடி நின்று தேங்காய், பூ, பழம் வைத்து முத்துமாரியம்மனுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர். பின்னர் மாலை 6 மணிக்கு தேர் கோவில் நிலையை வந்தடைந்தது.

இதையடுத்து முத்துமாரியம்மனுக்கு சிறப்பு ஆராதனை நடந்தது. இதில் அன்னவாசல், வயலோகம், இலுப்பூர், குடுமியான்மலை, மாங்குடி, புதூர், குளவாய்ப்பட்டி, மண்ணவேளாம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதை தொடர்ந்து காப்பு அவிழ்த்தல் மற்றும் மஞ்சள் நீராட்டு விழாவுடன் நாளை (செவ்வாய்க்கிழமை) திருவிழா நிறைவு பெறுகிறது.

நேர்த்திக்கடன்

தேரோட்டத்தை முன்னிட்டு முன்னதாக காலை முதலே வயலோகத்தை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து பால்குடம் மற்றும் காவடி எடுத்தும், கரும்பு தொட்டில், அலகு குத்தியும் பக்தர்கள் கோவிலுக்கு ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடனை செலுத்தி அம்மனை வழிபட்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்களும் செய்திருந்தனர். அன்னவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.


Next Story