முத்துமாரியம்மன், அய்யனார் கோவில் தேரோட்டம்
மேலத்தானியம், வடவாளம் கிராமங்களில் முத்துமாரியம்மன், அய்யனார் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
முத்துமாரியம்மன் கோவில்
காரையூர் அருகே மேலத்தானியத்தில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்ேகாவிலில் கடந்த 3-ந் தேதி காப்பு கட்டுதலுடன் திருவிழா தொடங்கியது. அதனை தொடர்ந்து மண்டகப்படிதாரர்கள் சார்பில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தினமும் பல்வேறு வாகனங்களில் அம்மன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடைபெற்றது.
தேரோட்டம்
இதையொட்டி சிறப்பு அலங்காரத்தில் அம்மன் திருத்தேரில் எழுந்தருளினார். பின்னர் திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய வீதிகளில் அசைந்தாடி வந்தது. அப்போது பக்தர்கள் ஒவ்வொரு வீதியிலும் கூடி நின்று தேங்காய், பழம் வைத்து அம்மனுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர். பின்னர் தேர் நிலையை வந்தடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் மேலத்தானியம் எட்டுப்பட்டி கிராமத்தார்கள் செய்திருந்தனர்.
கலியுக மெய்ய அய்யனார் கோவில்
ஆலங்குடி அருகே வடவாளம் கிராமத்தில் கலியுக மெய்ய அய்யனார் கோவில் உள்ளது. இக்கோவிலில் திருவிழா கடந்த 2-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கி நடைபெற்று வந்தது. ஒவ்வொரு நாளும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. இதையடுத்து நேற்று பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும் தீமிதி நிகழ்ச்சி நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடைபெற்றது. இதையடுத்து சிறப்பு அலங்காரத்தில் கலியுக மெய்ய அய்யனார் எழுந்தருளினார். பின்னர் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். தேரை பக்தர்கள் முக்கிய வீதிகள் வழியாக இழுத்து வந்து கோவில் நிலையை வந்தடைந்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கிராம முக்கியஸ்தர்கள் மற்றும் இளைஞர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.