முத்துரங்கம் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் தேர்வு
இந்திய அளவிலான ஆணழகன் போட்டியில் பங்கேற்க முத்துரங்கம் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
திருவள்ளுவர் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளுக்கு இடையே ஆணழகன் போட்டி ஆற்காடு எஸ்.எஸ்.எஸ். கல்லூரியில் நடைபெற்றது. இதில், பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர்.
போட்டியில் வேலூர் முத்துரங்கம் அரசு கலைக்கல்லூரி முதுகலை முதலாம் ஆண்டு மாணவர் விக்னேஷ் கலந்து கொண்டு 65 கிலோ எடைப்பிரிவில் முதலிடமும், சாம்பியன் ஆப் சாம்பியனில் 2-ம் இடமும் பிடித்தார்.
அதேபோன்று கல்லூரி இளங்கலை 3-ம் ஆண்டு மாணவர் பிரவீன்குமார் 75 கிலோ எடைப்பிரிவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தனர். இதன் மூலம் இருவரும் இந்திய அளவில் கல்லூரிகளுக்கு இடையே நடைபெறும் ஆணழகன் போட்டிக்கு தேர்வாகி உள்ளனர்.
பல்கலைக்கழக அளவிலான ஆணழகன் போட்டியில் வெற்றி பெற்று சாதனை படைத்த மாணவர்கள் விக்னேஷ், பிரவீன்குமார் ஆகியோரை கல்லூரியின் முதல்வர் மலர், தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் முனைவர் பத்மினி, உடற்கல்வி இயக்குனர் அகிலன் ஆகியோர் பாராட்டினர்.