நகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் முற்றுகை

திருமுருகன்பூண்டி நகராட்சி 18-வது வார்டு ஜெ.ஜெ. நகரில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. அந்த பகுதிக்கு குடிநீர் மற்றும் குடிநீர் அல்லாத பயன்பாட்டிற்கு குழாய் விஸ்தரிப்பு செய்ய ரூ.5½ லட்சம் மதிப்பில் பணிகள் மேற்கொள்வதற்கான தீர்மானம் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு நகராட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஆனால் இதுவரை அந்த பணிகள் அங்கு நடைபெறவில்லை. இதுகுறித்து நகராட்சி கமிஷனர் மற்றும் தலைவரிடம் பலமுறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதை கண்டித்து 18-வது வார்டு கவுன்சிலர் தங்கம்பூபதி தலைமையில் அப்பகுதியை சேர்ந்த பெண்கள் ஏராளமானோர் நேற்று காலை திருமுருகன்பூண்டி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் இதே கோரிக்கையை வலியுறுத்தி அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர். மனுவை பெற்றுக்கொண்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.
இதையடுத்து பெண்கள் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.






