மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்
திருப்பூர் 25-வது வார்டு எஸ்.பி.நகரில் புதிய சாக்கடை கால்வாய் அமைத்து தரக்கோரிமண்டல அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள் அதிகாரியின் வாகனத்தை
சிறைபிடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
முற்றுகை
திருப்பூர் மாநகராட்சி 25-வது வார்டு எஸ்.பி.நகரில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. அந்த பகுதியில் முறையான சாக்கடை கால்வாய் வசதி இல்லாததால் அடிக்கடி கழிவுநீர் மற்றும் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது. இந்த பிரச்சினைக்கு தீர்வுகாண வலியுறுத்தி 25-வது வார்டு கவுன்சிலர் அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த எஸ்.பி.நகரை சேர்ந்த பொதுமக்கள் 25-வது வார்டு கவுன்சிலர் தங்கராஜ் தலைமையில் நேற்று காலை 1-வது மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
பின்னர் கோரிக்கை தொடர்பாக உதவி கமிஷனரை சந்தித்து மனு கொடுக்க பொதுமக்கள் சென்றனர். அங்கு அவர் இல்லாததால் உதவி நிர்வாக பொறியாளர் சுப்பிரமணியத்திடம் மனு கொடுக்க சென்றனர். ஆனால் அவர் தனது வாகனத்தில் ஏறி வெளியே புறப்பட தயாரானார். ஆனால் பொதுமக்கள் அவரின் வாகனத்தை சிறைபிடித்து கோரிக்கை தொடர்பாக அவரிடம் முறையிட்டனர். ஆனால் அவர் அதை பொருட்படுத்தாமல் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
இதைத் தொடர்ந்து 1-வது மண்டல தலைவர் உமாமகேஸ்வரி சிட்டி வெங்கடாசலத்தை சந்தித்து மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-
கோரிக்கை மனு
தாய்மூகாம்பிகை நகர், சிறுபூலுவப்பட்டி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் எஸ்.பி.நகர் வழியாக செல்லும்போது அந்த பகுதியில் கால்வாய் குறுகலாக இருப்பதால் அடைப்பு ஏற்பட்டு அடிக்கடி வீடுகளுக்குள் கழிவுநீர் புகுந்து விடுகிறது. எனவே அந்த பகுதியில் புதிய சாக்கடை கால்வாய் அமைத்து தரவேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. மனுவை பெற்றுக் கொண்ட மண்டல தலைவர் புதிய கால்வாய் அமைக்கும் திட்டம் ஏற்கனவே பரிசீலனையில் இருப்பதால் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று உறுதியளித்தார். இதையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.