அடிப்படை வசதிகள் நிறைவேற்றி தரக்கோரி மண்டல அலுவலகம் முற்றுகை


அடிப்படை வசதிகள் நிறைவேற்றி தரக்கோரி  மண்டல அலுவலகம் முற்றுகை
x
திருப்பூர்


திருப்பூர் 11-வது வார்டு திலகர்நகர் பகுதியில் அடிப்படை வசதிகள் நிறைவேற்றி தரக்கோரி 1-வது மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள் 2 மணி நேரம் அலுவலக வாசலில் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மண்டல அலுவலகம் முற்றுகை

திருப்பூர் மாநகராட்சி 11-வது வார்டுக்குட்பட்ட திலகர்நகர் பகுதியில் ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன. ஆனால் அங்கு தார்சாலை, பாதாள சாக்கடை, குடிநீர், குப்பை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முறையாக செய்து கொடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் 50-க்கும் மேற்பட்டோர் நேற்று காலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் நகரக்குழு உறுப்பினர் நவபாலன் தலைமையில், நகரச் செயலாளர் நந்தகோபால், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரங்கராஜ், நகரக்குழு உறுப்பினர்கள் ஆறுமுகம், சின்னசாமி, உமாநாத் மற்றும் கட்சி நிர்வாகிகள் 1-வது மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

அவர்களிடம் உதவி பொறியாளர் முனியாண்டி பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் இதில் சமரசமடையாத பொதுமக்கள், அவருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், அலுவலக வாசலில் 2 மணி நேரம் தரையில் அமர்ந்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து 1-வது மண்டல உதவி கமிஷனர் முருகேசன், அனுப்பர்பாளையம் போலீஸ் சரக உதவி கமிஷனர் நல்லசிவம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

அடிப்படை வசதிகள்

அப்போது அடிப்படை வசதிகள் தொடர்பாக பலமுறை மனு கொடுத்துள்ள நிலையில், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று ஆவேசமாக கூறினார்கள். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று சாலைப்பணிகள் உடனடியாகவும், மற்ற அடிப்படை வசதிகள் படிப்படியாக செய்து கொடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் உறுதியளித்தனர். இதைத்தொடர்ந்து கோரிக்கை தொடர்பாக பொதுமக்கள் மனு கொடுத்து விட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, 11-வது வார்டு திலகர்நகர் பகுதியில் நீண்ட காலமாக நிறைவேற்றப்படாமல் உள்ள கோரிக்கைளை நிறைவேற்றக்கோரி கடந்த ஜூலை மாதம் 18-ந்தேதி மண்டல அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது. மறுநாளே உதவி பொறியாளர் நேரில் வந்து ஆய்வு செய்து பணிகளை உடனடியாக செய்வதாக கூறிச்சென்றார். ஆனால் 2 மாதங்களுக்கு மேலாகியும் எந்த கோரிக்கையும் நிறைவேற்றப்படவில்லை. எனவே தார்சாலை, பாதாள சாக்கடை, குப்பை, குடிநீர் உடைப்பு, சுகாதார பணிகள் உள்ளிட்ட கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story