மயோபதி காப்பகத்தை பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை பார்வையிட்டார்


மயோபதி காப்பகத்தை பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை பார்வையிட்டார்
x

வெள்ளாங்குளி மயோபதி காப்பகத்தை பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை பார்வையிட்டார்.

திருநெல்வேலி

அம்பை:

தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வகையில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார். நெல்லை மாவட்டத்தில் பாதயாத்திரை மேற்கொண்ட அண்ணாமலை வெள்ளாங்குளி மயோபதி காப்பகத்துக்கு வந்தார். அங்கு தசை சிதைவு நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகளையும், நடக்க முடியாதவர்களை மீண்டும் நடக்க செய்யும் வகையில் அளிக்கப்படும் பயிற்சி முறைகளையும் பார்வையிட்டார்.

முன்னதாக மயோபதி காப்பகத்துக்கு வந்த அண்ணாமலையை மயோபதி குழும தலைவர் ராமசாமி வரவேற்றார். காப்பகத்தில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் நடந்தே சென்று சிகிச்சை முறைகளை பார்வையிட்ட அண்ணாமலையிடம், மயோபதி குழும தலைவர் ராமசாமி கடந்த 2015-ம் ஆண்டு மாநிலத்திலேயே சிறந்த நிறுவனம் என்ற விருதும் தங்க பதக்கம் பெற்றதையும், 2018-ம் ஆண்டு தமிழ்நாடு அரசின் சிறந்த சிகிச்சை மையத்துக்காக வழங்கப்பட்ட விருதையும் காண்பித்தார். மேலும் தமிழ்நாட்டில் நடக்க முடியாதவர்களை மீண்டும் நடக்க செய்து தமிழ்நாடு அரசின் விருது மற்றும் தங்க பதக்கங்களை வாங்கியதையும் எடுத்துக்காட்டினார்.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் தசைசிதைவு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் மயோபதி காப்பகத்தில் சிகிச்சையும், பயிற்சி முறையும் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

நிகழ்ச்சியில் நெல்லை சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன், மராட்டிய மாநில சட்டமன்ற உறுப்பினர் கேப்டன் தமிழ்செல்வன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.


Next Story