அறச்சலூரில் அட்டகாசம் செய்த மர்ம விலங்கை பிடிக்க 9 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் மலைக்கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை


அறச்சலூரில் அட்டகாசம் செய்த மர்ம விலங்கை பிடிக்க  9 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள்  மலைக்கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை
x
தினத்தந்தி 21 Oct 2023 3:55 AM IST (Updated: 21 Oct 2023 4:05 AM IST)
t-max-icont-min-icon

அறச்சலூரில் அட்டகாசம் செய்யும் மர்ம விலங்கை கண்டுபிடிக்க 9 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

ஈரோடு

அறச்சலூரில் அட்டகாசம் செய்த மர்மவிலங்கை கண்டுபிடிக்க 9 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன. மேலும் தீர்த்த குமாரசாமி மலைக்கோவிலுக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.

கேமராக்கள் பொருத்தம்

ஈரோடு மாவட்டம் அறச்சலூர் கிழக்கு தலவுமலை பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தோட்டத்துக்குள் புகுந்த மர்மவிலங்கு ஒன்று கன்றுக்குட்டியை இழுத்துச் சென்றது. இதுகுறித்த தகவல் கிடைத்ததும் அறச்சலூர் வனத்துறையினர் அங்கு சென்று அந்த விலங்கின் கால்தடத்தை பதிவு செய்துவிட்டு் சென்றனர். மர்ம விலங்கு அட்டகாசத்தால் அந்த பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

இதுகுறித்து ஈரோடு வனச்சரக அலுவலர் சுரேஷ் கூறியதாவது:-

அறச்சலூர் கிழக்கு தலவுமலை பகுதியில் உள்ள தோட்டத்துக்குள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கன்றுக்குட்டியை இழுத்துச்சென்ற மர்மவிலங்கு எது என்று தெரியவில்லை. அது சிறுத்தைப்புலி அல்லது புலியாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் 9 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

கூண்டு அமைப்பு

மேலும் சம்பவ நடந்த இடத்தில் ஒரு கூண்டும் அமைக்கப்பட்டுள்ளது. அதில் சிக்கிய பிறகுதான் எந்த விலங்கு என்று தெரியவரும். எனவே பொதுமக்கள் பீதி அடைய வேண்டாம். வன அலுவலர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். யாரும் எக்காரணம் கொண்டும் வனப்பகுதிக்குள் செல்ல வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிலையில் சிறுத்தைப்புலி நடமாட்டம் இருப்பதாக தகவல் பரவியதால் தீர்த்த குமாரசாமி மலைக்கோவிலுக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்து. இது தொடர்பாக கோவில் நுழைவுவாயில் முன்பு கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிப்பு நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.


Next Story