இரவில் இளைஞர்கள் காவல் காத்த நிலையில் துணிகரம்:குருசடியில் மீண்டும் புகுந்து உண்டியலை கொள்ளையடித்த மர்ம ஆசாமிகள்
நித்திரவிளை அருகே இரவில் இளைஞர்கள் காவல் காத்த நிலையில் குருசடியில் மீண்டும் மர்ம ஆசாமிகள் புகுந்து உண்டியல் பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.
கொல்லங்கோடு:
நித்திரவிளை அருகே இரவில் இளைஞர்கள் காவல் காத்த நிலையில் குருசடியில் மீண்டும் மர்ம ஆசாமிகள் புகுந்து உண்டியல் பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.
ஆலய குருசடி
நித்திரவிளை அருகே உள்ள சரல்முக்கு பகுதியில் கோயிக்கல்தோப்பு புனித தோமையார் ஆலயம் உள்ளது. இங்கு தற்போது ஆலயம் புனரமைப்பு பணி நடந்து வருவதால், அருகில் உள்ள மாதா குருசடியில் ஆராதனைகள் நடைபெற்று வருகிறது. இந்த மாதம் முதல் வாரம் குருசடியில் திருவிழா நடைபெற்றது. இதையொட்டி மாதா சொரூபத்தில் தங்க நகைகளை அணிவித்திருந்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் பெண்கள் ஆராதனைக்காக வந்தபோது மாத சொரூபத்தின் அலங்காரம் கலைக்கப்பட்டிருந்தது. இதனால் சந்தேகமடைந்த பெண்கள் ஆலய பங்குதந்தை மனு இம்மானுவேலிடம் தகவல் தெரிவித்தனர்.
நகைகள் கொள்ளை
பங்குத்தந்தை அங்கு வந்து பார்த்தபோது குருசடியின் பின்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு சொரூபத்தில் அணிவிக்கப்பட்ட நகைகளில் ஒரு பவுன் தங்க சங்கிலி, 3 மோதிரங்கள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. அதே நேரத்தில் சொரூபத்தின் நெற்றியில் வைக்கப்பட்டிருந்த தங்க பொட்டு மற்றும் தாலி சுட்டிகள் அப்படியே இருந்தன. மேலும் குருசடியில் இருந்த உண்டியல் உடைக்கப்படாமல் இருந்தது.
இதுகுறித்து நித்திரவிளை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து இரவானதும் அங்கு கூடிய பொதுமக்கள் கலைந்து செல்ல தொடங்கினர்.
காவல் காத்த இளைஞர்கள்
அதேநேரத்தில் ஆலயத்தின் உள்ளே விலைமதிப்புமிக்க கட்டுமான பொருட்கள் இருந்ததால் அவற்றை திருட மர்ம ஆசாமிகள் மீண்டும் வரலாம் என்ற அச்சத்தில் ஆலய நிர்வாகிகள் ஒருசிலர் மற்றும் இளைஞர்கள் அங்கே இருந்து காவல் காக்க தொடங்கினர்.
இவர்கள் நள்ளிரவு ஒரு மணிவரை காவல் காத்தனர். பின்னர் அவர்களுக்கு தூக்கம் வந்ததால் 'இனிமேல் யாரும் வரமாட்டார்கள்' என்று எண்ணி தங்களது வீடுகளுக்கு சென்றனர்.
உண்டியல் கொள்ளை
இதனையடுத்து நேற்று காலையில் ஆலய நிர்வாகிகள் குருசடிக்கு வந்த ேபாது அங்கிருந்த உண்டியலின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அதில் இருந்த காணிக்கை பணம் கொள்ளையடிக்க பட்டிருந்தது.
இரவில் காவல் காத்த இளைஞர்கள் வீட்டுக்கு சென்ற நேரத்தில் மர்ம ஆசாமிகள் மீண்டும் குருசடிக்கு வந்து கைவரிசை காட்டியுள்ளனர்.
இதுகுறித்து நித்திரவிளை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் மீண்டும் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். கொள்ளை நடந்த இடத்திலும் அதனை சுற்றியுள்ள வீடுகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் இல்லாததால் போலீசாருக்கு கொள்ளையர்களை அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
பரபரப்பு
குருசடியில் இருந்த உண்டியலை ஒவ்வொரு வாரமும் கோவில் நிர்வாகத்தினர் திறந்து காணிக்கை பணத்தை எடுப்பது வழக்கம். இதனால் அதிக தொகை திருடு போக வாய்ப்பில்லை என்று கூறப்பட்டது.
அதேநேரத்தில் ஒரே குருசடியில் அடுத்தடுத்த நாட்களில் தொடர்ந்து திருட்டு நடைபெற்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.