ஊர் நாட்டாமை மர்ம சாவு: கொலை செய்யப்பட்டதாக கூறி உறவினர்கள் சாலை மறியல்
ஊர் நாட்டாமை மர்ம சாவில் அவர் கொலை செய்யப்பட்டுள்ளார் எனக்கூறி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
மர்ம சாவு
அரியலூர் மாவட்டம், வி.கைகாட்டி அருகே உள்ள தேளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி (வயது 86). விவசாயி. மேலும் ஊர் நாட்டாமையான இவர் நேற்று மதியம் தனது வயலுக்கு சென்றுள்ளார். அங்கு ரத்த காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதனை பார்த்த அப்பகுதி மக்கள் இதுகுறித்து உடனே கோவிந்தசாமியின் உறவினர்களுக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து அவரது குடும்பத்தினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கோவிந்தசாமியின் உடலை பார்த்து கதறி அழுதனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த அரியலூர் மற்றும் கயர்லாபாத் போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வர வைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. சம்பவ இடத்திற்கு மோப்பநாய் வர வைக்கப்பட்டது. மோப்பநாய் சம்பவ இடத்தை மோப்பம் பிடித்துவிட்டு சிறிது தூரம் ஓடிச்சென்று நின்று விட்டது. அது யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இந்த நிலையில் கோவிந்தசாமியின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது உடலை எடுத்துசெல்ல உறவினர்கள் எதிர்பு தெரிவித்தால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
சாலை மறியல்
இந்த நிலையில் கோவிந்தசாமி கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், கொலையாளிகளை கண்டறிந்து கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி விளாங்குடி ஆரம்ப சுகாதார நிலையம் அருகே திருச்சி- சிதம்பரம் சாலையில் கோவிந்தசாமியின் உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையின்போது பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு தான் அவர் எப்படி இறந்தார் என்பது தெரிய வரும், எனவே பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என தெரிய வந்தால் குற்றவாளிகள் உடனே கைது செய்யப்படுவார்கள் என போலீசார் கூறினர். இதனை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் திருச்சி- சிதம்பரம் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், கோவிந்தசாமி அணிந்திருந்த 1 பவுன் மோதிரம் மற்றும் ரூ.5000 காணாமல் போயிருந்தது தெரியவந்தது குறிப்பிடத்தக்கது.