அ.தி.மு.க. அவைத்தலைவர் மீது மர்ம கும்பல் சரமாரி தாக்குதல்
அ.தி.மு.க. அவைத்தலைவர் மீது மர்ம கும்பல் சரமாரி தாக்குதல் நடந்தது.
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டி நகர அ.தி.மு.க. அவைத்தலைவர் மீது மர்ம கும்பல் சரமாரியாக தாக்கினர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அ.தி.மு.க. அவைத்தலைவர்
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நேரு நகரில் வசிப்பவர் வக்கீல் அன்பரசன்(வயது 52). இவர், திருத்துறைப்பூண்டி நகர அ.தி.மு.க. அவைத்தலைவராக இருந்து வருகிறார்.
இவர் நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் தனது வீட்டில் இருந்து அருகே உள்ள அண்ணாசிலை பகுதிக்கு நடந்து சென்று கொண்டு இருந்தார்.
மர்ம கும்பல் சரமாரி தாக்குதல்
அப்போது அந்த வழியாக ஒரு காரில் வந்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை வழிமறித்து கட்டை மற்றும் பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக தாக்கி விட்டு அங்கிருந்து காரில் தப்பி சென்று விட்டனர்.
இதில் ரத்தம் சொட்டிய நிலையில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
போலீசார் விசாரணை
இதுகுறித்து அன்பரசன் திருத்துறைப்பூண்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில், காரில் வந்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல் தன் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியதாகவும், அவர்கள் முகத்தை மறைத்து இருந்ததால் அவர்கள் யார்? என்று தெரியவில்லை என்றும் கூறியிருந்தார்.
அதன்பேரில் திருத்துறைப்பூண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கழனியப்பன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தாக்குதல் நடந்த இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து காரில் வந்த மர்ம கும்பல் யார்? எதற்கான அவர் மீது தாக்குதல் நடத்தினர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரில் வந்த மர்ம கும்பல் சரமாரியாக அ.தி.மு.க. அவைத்தலைவர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.