வீட்டின் பூட்டை உடைத்து 10 ரூபாயை திருடிச்சென்ற மர்மநபர்கள்
வீட்டின் பூட்டை உடைத்து 10 ரூபாயை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.
பெரம்பலூர் நான்கு ரோடு அருகே முத்துலட்சுமி நகர், 6-வது தெரு, தங்கம் நகரை சேர்ந்தவர் புஷ்பரத்தினம் (வயது 45). இவர் தனது குடும்பத்தினருடன் மராட்டிய மாநிலம் புனேயில் வசித்து வருகிறார். கடந்த மே மாதம் கோடை விடுமுறையில் பெரம்பலூரில் உள்ள தனது வீட்டிற்கு புஷ்பரத்தினம் குடும்பத்தினருடன் வந்து சென்றார். இந்த நிலையில் நேற்று புஷ்பரத்தினத்தின் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதனை கண்ட பக்கத்து வீட்டுக்காரர்கள் இதுகுறித்து புஷ்பரத்தினத்துக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தனர்.
மேலும் பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று புஷ்பரத்தினத்தை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு வீட்டில் வைத்திருந்த பொருட்கள் குறித்து விசாரித்தனர். அப்போது, 10 ரூபாய்க்கு சில்லறை காசுகள், பழைய கைக்கடிகாரம் ஒன்று வைத்திருந்ததாக புஷ்பரத்தினம், போலீசாரிடம் தெரிவித்தாக கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, 10 ரூபாய் சில்லறை காசுகளையும், பழைய கைக்கடிகாரத்தையும் மர்மநபர்கள் திருடி சென்றிருந்தது தெரியவந்தது. இது குறித்து தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.