கோவை புறநகர் பகுதியில் மர்ம நபர்கள் நடமாட்டம்
கோவை புறநகர் பகுதியில் மர்ம நபர்கள் நடமாட்டம் கண்காணிப்பு கேமராவில் சிக்கியது
துடியலூர்
கோவை புறநகர் பகுதியான துடியலூர், பன்னிமடை, வட்டார பகுதிகளில் கையில் பையுடன், தலையை மப்ளரால் மறைத்தபடி மர்ம நபர்கள் நடமாட்டம் இருப்பதும் கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி உள்ளது.
இது குறித்து துடியலூர், சின்னதடாகம் போலீசார் கூறுகையில், மர்ம நபர்கள் நடமாட்டம் இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.
ஆகவே இரவு நேரத்தில் குடியிருப்பில் சுற்றியுள்ள வெளிப்புறத்தில் நல்ல வெளிச்சமான விளக்குகள் அமைக்க வேண்டும்.
வீட்டின் கதவு இருபுற தாழ்ப்பாள் கொண்டதாக இருக்க வேண்டும். கிரில் கதவு கூடுதலாக இருந்தால் நல்லது. கதவில் பாதுகாப்பு சங்கிலி பொருத்த வேண்டும்.கதவில் கண்டிப்பாக உள்ளிருந்து வெளியே பார்க்கும் வகையிலான லென்ஸ் பொருத்த வேண்டும்.
வீட்டுக்குள் அத்துமீறி யாராவது நுழைந்தால், எச்சரிக்கும் வகையில் அலாரம் பொருத்துவது நல்லது.அடுக்குமாடி குடியிருப்பில் பாதுகாப்புக்கான, பாதுகாவலர்களை நியமிக்க வேண்டும்.
குடியிருப்பில் தேவைப்படக்கூடிய அனைத்து இடங்களிலும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும். வேலைக்காரர்கள் விவரங்கள் பற்றியும் அவர்கள் முன்பு வேலை செய்த இடத்தில் நடந்து கொண்ட விதம் குறித்தும் விசாரித்து வைப்பது நல்லது.
அவர்களது புகைப்படத்தை சேகரித்து வைக்க வேண்டும். கியாஸ் சிலிண்டர், தண்ணீர் கேன், பால் இவற்றை கொண்டு வரும் நபர்கள் மீதும் சரியான கவனம் செலுத்த வேண்டும்.அவர்களைப் பற்றிய விவரங்கள் தெரிந்திருக்க வேண்டும்.
வீட்டை பூட்டி வெளியூர் செல்ல நேர்ந்தால், போலீஸ் நிலையத்திலும் பக்கத்து வீட்டுக்காரருக்கும் தகவல் தெரிவிக்க வேண்டும்.
அடுக்குமாடி குடியிருப்பில் இருப்பவர்கள், வெளிநபர் பார்வையாளர் வருவது குறித்து பார்வையாளர்கள் குறிப்பேடு பராமரிக்க வேண்டும். பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.