மர்மமான முறையில் இறந்து கிடந்த 3 புலிகளின் உடல் பாகங்கள் சென்னை ஆய்வகத்திற்கு அனுப்பி வைப்பு
மர்மமான முறையில் இறந்து கிடந்த 3 புலிகளின் உடல் பாகங்கள் ஆய்வுக்காக சென்னை ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று வனத்துறை அதிகாரி தெரிவித்தார்.
ஊட்டி: மர்மமான முறையில் இறந்து கிடந்த 3 புலிகளின் உடல் பாகங்கள் ஆய்வுக்காக சென்னை ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று வனத்துறை அதிகாரி தெரிவித்தார்.
3 புலிகள் மர்மச்சாவு
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட சீகூர் வனப்பகுதியில் வனத்துறை ஊழியர்கள் ரோந்து சென்றனர். அப்போது அங்கு 2 புலி குட்டிகள் இறந்து கிடந்தன. 2 புலி குட்டிகளும் பிறந்து 2 வாரமே ஆனது தெரியவந்தது. ஆனால் அந்த 2 புலிகுட்டிகளும் எப்படி இறந்தன என்பது தெரியவில்லை. இதுதொடர்பாக முதுமலை புலிகள் காப்பக அதிகாரிகள், வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல் நேற்றுமுன்தினம் ஊட்டி அருகே நடுவட்டம் பகுதியில் உள்ள தனியார் தேயிலை தோட்டத்தில் 7 வயதுடைய ஒரு பெண் புலி மர்மமான முறையில் இறந்து கிடந்தது. நீலகிரியில் அடுத்தடுத்து 3 புலிகள் இறந்த சம்பவம் வனவிலங்கு ஆர்வலர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
உடல் பாகங்கள் அனுப்பி வைப்பு
இதுகுறித்து நீலகிரி மாவட்ட வனத்துறையினர் கூறியதாவது:-
சீகூர் வனப்பகுதியில் இறந்த 2 புலி குட்டிகளின் உடல் உறுப்புகள் ஆரோக்கியமாக இருந்தது தெரியவந்தது. ஆனால், புலி குட்டிகள் எப்படி இறந்தது என்பது தெரியவில்லை. தாய் புலி உயிருடன் உள்ளதா? அல்லது தாய் புலி இறந்ததால் குட்டிகளும் இறந்ததா? என்ற சந்தேகம் உள்ளது. எனவே தாய் புலியை தேடி வருகிறோம். ஒரு சில நேரங்களில் புதிதாக குட்டிகள் ஈன்ற தாய், புலிக்குட்டிகளை எவ்வாறு கையாள வேண்டும் என்று தெரியாமல் இருக்கும். அதுபோன்ற சூழ்நிலையில் குட்டி புலிகள் இறந்திருக்கலாம். இதற்கிடையே நடுவட்டம் பகுதியில் சுமார் 7 வயது மதிக்கத்தக்க பெண் புலி இறந்துள்ளது. இந்த பெண் புலி சீகூர் வனப்பகுதியில் இறந்த குட்டி புலிகளின் தாயாக இருக்க வாய்ப்பு இல்லை. நடுவட்டம் பகுதியில் இறந்த புலி மற்றொரு புலியுடன் சண்டையிட்டதால் இறந்திருக்க வாய்ப்பு உள்ளது. இறந்த 3 புலிகளின் உடல்களும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மேலும் 3 புலிகளின் உடல் பாகங்கள் சென்னை எக்மோர் மற்றும் கோவை ரேஸ்கோர்ஸில் உள்ள ஆய்வகத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. டி.என்.ஏ. பரிசோதனை தேவைப்பட்டால் மட்டும் ஐதராபாத்தில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பப்படும். இந்த ஆய்வு முடிவுகள் கிடைத்த பின்னர்தான் புலிகள் இறந்ததற்கான காரணம் தெரியவரும். இவ்வாறு அவர்கள் கூறினார்.