சிறுமி நரபலி வழக்கில் விலகுமா மர்மம்....?
சிறுமி நரபலி வழக்கில் விலகுமா மர்மம்....?
மூன்று வயது மூத்தப்பிள்ளையாய் செல்லப்பிள்ளை அவள்...அதனால் மூச்சுக்கு முன்னூறு தடவை அந்த பிள்ளையை கொஞ்சுவதில் மிஞ்ச யாருமில்லை என்று பாசத்தில் பரிணமித்தனர் அவளது பெற்றோர். அந்த சின்னச்சிறு கரங்களும் எப்போதும், தனது பெற்றோரின் கரங்களை வரங்களாக பற்றி நடைபோட்டது.
விவசாய விளை நிலத்தில் அந்த குடும்பம் இருந்தாலும், முத்தாக கிடைத்துபோல் மூத்தமகளுக்காக நேசத்தின் விளை நிலமாய் மாறியது. இதனால் அந்த பிள்ளையின் உள்ளமோ.....இன்பத்தில் எப்போதும் இறக்கை கட்டி பறக்கும் தேன் சிட்டாய் மாறியது.
ஆம்....கோவையை சேர்ந்த விவசாயி தர்மலிங்கம்-மகேஸ்வரி தம்பதியின் மகள்் ஷாலினி (வயது3). இந்த மூன்று வயது முல்லையால் அந்த குடும்பம் எல்லையில்லா மகிழ்ச்சியில் நிறைந்து இருந்தது. இந்த நிலையில்தான் மகேஸ்வரி 2-வது குழந்தைக்கு தயாக தயாரானார். நிறைமாத கர்ப்பிணியானார்.
கண்கள் தோண்டப்பட்டன
இதைத்தொடர்ந்து பிரசவத்துக்காக பேரூரில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு மகள் ஷாலினியுடன் மகேஸ்வரி சென்றார். தன்னுடைய மூத்த மகளின் கரங்களின் ஸ்பரிசத்தில் எப்போதும் மாறாமல் இருந்த மகேஸ்வரிக்கு அவளை பறிகொடுப்போம் என்று கொஞ்சமும் நினைத்துக்கூட பார்க்கவில்லை. ஆனால் நெஞ்சை உறைய வைக்கும் அந்த சம்பவம் நடந்து விட்டது. இந்த சம்பவம் கடந்த 2004-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் குறிவிட்ட ஒரு தேதியில் நடந்தது.
சம்பவத்தன்று பெற்றோர் வீட்டில் இருந்ததை விட பாட்டி வீட்டுக்கு வந்ததும் ஷாலியின் உற்சாகம் துள்ளலானது....துரு துருவென விளையாடிக்கொண்டிருந்த சிறுமி ஷாலினி பாட்டி வீட்டுக்கு வந்த 2 நாட்களில் திடீரென்று காணாமல் போனாள். பல இடங்களில் தேடி அலைந்தும் சிறுமி கிடைக்காததால் வீடே கவலையில் ஆழ்ந்தது.
இந்தநிலையில் அருகே உள்ள குளக்கரையில் சிறுமி ஷாலினி கோரமான நிலையில் இறந்து கிடந்தாள். அவளது உடலை பார்த்து தாய் மகேஸ்வரி மற்றும் குடும்பத்தினர் கதறி துடித்தனர். அப்போது மேலும் ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. சிறுமியின் 2 கண்களும் தோண்டப்பட்டு இருந்தன.
நரபலி
கை, கால்களில் ரத்தக்குழாய்கள் அறுக்கப்பட்டு உடலில் இருந்து முழு ரத்தமும் வழிந்தோடச்செய்யப்பட்டு சிறுமி மிக கொடூரமானமுறையில் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இரு கைகளை மடக்கும் இடத்திலும், கால்களில் முட்டிக்கு பின்புறத்திலும் கத்தியால் ரத்தக்குழாய்கள் வெட்டப்பட்டு ரத்தம் உடலில் இருந்து கசிய விடப்பட்டு சிறுமி நரபலி கொடுக்கப்பட்டு இருப்பது உறுதியானது. இந்த நரபலி கும்பலை பிடிக்க 5 தனிப்படைகளை அமைத்து பல ஆண்டுகளாக தேடுதல் வேட்டை நடைபெற்றது. கேரள மாந்திரீக கும்பலின் கைவரிசையாக இருருக்கலாம் என்று கேரளாவிலும் தீவிரமாக தனிப்படையினர் விசாரணை நடத்தினர்.
மேலும் பேரூர் பகுதியில் மாந்திரீகம் செய்பவர்கள் உள்பட 200-க்கும் மேலானவர்களை பிடித்தும் விசாரணை நடத்தப்பட்டது. தாய்க்கு தலைமகளான சிறுமியை நரபலி கொடுத்த கும்பல் கடந்த 18 ஆண்டுகள் ஆகியும் இதுவரை கைதாகவில்லை. கண்டுபிடிக்க முடியாத வழக்காக குறிப்பு எழுதப்பட்டு இன்னும் இந்த வழக்கு கிடப்பில் உள்ளது.
மர்மம் விலகுமா..?
இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது, "சிறுமி ஷாலினி நரபலி வழக்கில் இன்னும் துப்புத்துலங்கவில்லை. அதே நேரம் தொடர்ந்து இந்த வழக்கு தொடர்பாக ஏதாவது தடயம் கிடைக்குமா? என்று பார்த்து வருகிறோம். மேலும் அந்த பகுதியில் மண்டை ஓடு வைத்து பூசை செய்யும் சாமியார்கள் உள்ளார்களா? என்றும் தொடர்ந்து ரோந்து செல்லும்போது கண்காணித்து வருகிறோம். நரபலி தொடர்பான தகவல் அறிந்தவர்களும் போலீசுக்கு தகவல் தெரிவிக்கலாம். அவர்களது பெயர் விவரம் ரகசியமாக வைக்கப்படும்"என்று தெரிவித்தனர்.
கோவையில் கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இந்த கொடூர நரபலி சம்பவம் இன்றும் இதயங்களை அதிர்ச்சியில் உறைய வைக்கிறது. இந்த அரக்கத்தனமான கொலையில் ஆள் யார் என்று துப்பு துலங்குமா? விலகுமா...மர்மம் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.