சுடுகாட்டில் மர்மநபர் கொன்று புதைப்பு?
மூங்கில்துறைப்பட்டு அருகே சுடுகாட்டில் மர்மநபர் கொன்று புதைக்கப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மூங்கில்துறைப்பட்டு,
மூங்கில்துறைப்பட்டு அருகே புதூர் ஏரியில் சுடுகாடு உள்ளது. இந்த சுடுகாட்டில் நேற்று ஒருவரை குழிதோண்டி புதைத்ததற்கான அடையாளம் இருந்தது. இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து வடபொன்பரப்பி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் வருவாய் ஆய்வாளர் அண்ணாமலை, கிராம நிர்வாக அலுவலர்கள் விஜய பிரபாகரன், மணிகண்டன் உள்ளிட்டவர்கள் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் அங்கு குழி தோண்டி முடப்பட்டு இருந்த இடத்தையும் பார்வையிட்டனர். அப்போது கிராம மக்கள் கூறுகையில், எங்களது கிராமத்தில் கடந்த 2 நாட்களில் யாரேனும் இறக்கவில்லை.
போலீசார் விசாரணை
எனவே மர்மநபர்கள் யாரையாவது கொலை செய்து இங்கு கொண்டு வந்து குழிதோண்டி புதைத்து விட்டு சென்று இருக்கலாம் என்று சந்தேகப்படுகிறோம் என்றனர். கிராம மக்கள் கூறுவதுபோல் யாரேனும் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளனரா? அல்லது வேறு ஏதேனும் காரணத்துக்காக குழி தோண்டி மூடப்பட்டதா? என்று தெரியாமல் போலீசார் திகைத்துப்போய் உள்ளனர். இதற்கு தீர்வு காண அந்த இடத்தை தோண்டி பார்க்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.