நாசரேத்தில் மாயமான சர்வேயர் எலும்புக்கூடாக மீட்பு


நாசரேத்தில் மாயமான சர்வேயர் எலும்புக்கூடாக மீட்பு
x

நாசரேத்தில் மாயமான சர்வேயர் எலும்புக்கூடாக மீட்கப்பட்டார்.

தூத்துக்குடி

நாசரேத்:

நாசரேத்தில் மாயமான சர்வேயர் எலும்புக்கூடாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மாயமான சர்வேயர்

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் கீழ தெருவைச் சேர்ந்தவர் பால்ராஜ். இவருடைய மகன் பாபு சங்கர் (வயது 39). இவர் நெல்லை மாவட்டம் திசையன்விளை தாலுகா அலுவலகத்தில் சர்வேயராக வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகவில்லை.

இவர் கடந்த மார்ச் மாதம் 10-ந்தேதி காலையில் வழக்கம்போல் வேலைக்கு செல்வதாக பெற்றோரிடம் கூறி விட்டு சென்றார். பின்னர் அவர் வீட்டுக்கு திரும்பி வராமல் மாயமானர்.

இதுகுறித்து கடந்த மார்ச் மாதம் 15-ந்தேதி நாசரேத் போலீஸ் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

எலும்புக்கூடு மீட்பு

இந்த நிலையில் நாசரேத் ஞானராஜ் நகர் தேரிக்காட்டு பகுதியில் நேற்று முன்தினம் மனித எலும்புக்கூடு கிடந்தது. அதன் அருகில் ஒரு ஜோடி செருப்பும் கிடந்தது. அங்குள்ள பனை மரத்தின் துவாரத்தில் ரூ.5,680 பணமும் சொறுகி வைக்கப்பட்டு இருந்தது.

உடனே சாத்தான்குளம் துணை போலீஸ் சூப்பிரண்டு அருள், நாசரேத் போலீஸ் இன்ஸ்பெக்டர் பட்டாணி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். மாயமான பாபு சங்கரின் பெற்றோர், குடும்பத்தினரும் எலும்புக்கூட்டை பார்வையிட்டனர். அப்போது அங்கு கிடந்த செருப்பு பாபு சங்கருடையது என்று தெரிவித்தனர்.

தொடர்ந்து அந்த எலும்புக்கூட்டை போலீசார் கைப்பற்றி தடயவியல் பரிசோதனைக்காக தூத்துக்குடி ஆய்வகத்துக்கு அனுப்பி வைத்தனர். இதில் அந்த எலும்புக்கூடு பாபுசங்கருடையது என்று உறுதிப்படுத்தப்பட்டது.

போலீசார் விசாரணை

பாபுசங்கருக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்தது. இதனால் அவர், ஞானராஜ் நகர் தேரிக்காட்டு பகுதிக்கு மது குடிக்க சென்றபோது, போதையில் பணத்தை பனை மரத்தில் சொறுகி வைத்துவிட்டு மயங்கி விழுந்து இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாசரேத்தில் மாயமான சர்வேயர் எலும்புக்கூடாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story