25 பேரிடம் பணம் மோசடி செய்த நாம் தமிழர் கட்சி பிரமுகர் கைது
போலி பட்டா வாங்கி வீடு கட்டித்தருவதாக கூறி 25 பேரிடம் பணம் மோசடி செய்த நாம் தமிழர் கட்சி பிரமுகரை போலீசார் கைது செய்தனர். மேலும் ஒருவரை வலைவீசி தேடி வருகின்றனர்.
கொள்ளிடம்:
போலி பட்டா வாங்கி வீடு கட்டித்தருவதாக கூறி 25 பேரிடம் பணம் மோசடி செய்த நாம் தமிழர் கட்சி பிரமுகரை போலீசார் கைது செய்தனர். மேலும் ஒருவரை வலைவீசி தேடி வருகின்றனர்.
பணம் மோசடி
கொள்ளிடம் அருகே பழையாறு மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர்கள் செண்பகசாமி, அண்ணாதுரை. இவர்கள் பழையாறு கிராமத்தில அரசு சார்பில் வழங்கப்பட்ட நிலத்திற்கு போலி பட்டா வாங்கி வீடு கட்டி தருவதாக சுமார் 25-க்கும் மேற்பட்டோரிடம் பணம் வாங்கிகொண்டு மோசடி செய்ததாக பாதிக்கப்பட்ட மக்கள் பழையாறு ஊர் பஞ்சாயத்தாரிடம் தெரிவித்தனர். இவர்களை விசாரணை நடத்த பஞ்சாயத்தார் வருமாறு கூறியும் செண்பகசாமியும், அண்ணாதுரையும் வரவில்லை.
போலீசில் புகார்
இதுகுறித்து பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் பழையாறு கிராமத்தலைவர் மறைசெல்வம் புதுப்பட்டினம் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது:-
செண்பகசாமி நாம் தமிழர் கட்சியில் ஊழல் தடுப்பு பாசறை மாவட்ட செயலாளராக உள்ளார். இவரும், அண்ணாதுரையும் சேர்ந்து கொண்டு அரசு வழங்கி நிலத்திற்கு போலி பட்டா வாங்கி வீடு கட்டித்தருவதாக கூறி 25-க்கும் மேற்பட்டவர்களிடம் இருந்து பணம் வசூல் செய்து மோசடி செய்துள்ளனர் என தெரிவித்திருந்தார்.
நாம் தமிழர் கட்சி பிரமுகர் கைது
இதுகுறித்து புதுப்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து செண்பகசாமியை கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய அண்ணாதுரையை வலைவீசி தேடி வருகின்றனர்.