பெண் தியாகத்தை போற்றும் நடுகல்
சிவகாசியில் உள்ள கோவிலில் பெண் தியாகத்தை போற்றும் 16-ம் நூற்றாண்டை ேசர்ந்த நடுகல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சிவகாசி,
சிவகாசியில் உள்ள கோவிலில் பெண் தியாகத்தை போற்றும் 16-ம் நூற்றாண்டை ேசர்ந்த நடுகல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
பழமையான நடுகல்
சிவகாசியில் உள்ள பெரியாண்டவர் மாலையம்மன் கோவிலில் பாண்டியநாடு பண்பாட்டு மைய தொல்லியல் கள ஆய்வாளர்கள் சிவகாசி பிரபு, அருப்புக்கோட்டை ஸ்ரீதர், தாமரைக்கண்ணன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு ஒரு பழமையான நடுகல் இருப்பதை கண்டறிந்தனர். இதனை ஆராய்ச்சி செய்தனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:- வீரதீர செயல்களில் ஈடுபட்டு வீரமரணம் அடைந்தவர்களுக்கு அவர்களின் நினைவாக நடுகல் எடுப்பது நமது முன்னோர்கள் பின்பற்றிய மரபாகும். இவற்றில் பெண்கள் தங்களது கணவன் இறந்துவிட்டால் துக்கம் தாளாமல் தானே முன்வந்து உயிர் துறப்பதும் ஒரு சடங்காக 19-ம் நூற்றாண்டின் முற்பகுதி வரை நடைமுறையில் இருந்து வந்தது.
நாயக்கர் காலம்
அந்த வகையில் தற்போது நாங்கள் கண்டறிந்த சிற்பமானது 3 அடி உயரத்திலும், 2 அடி அகலத்திலும் இடம் பெற்றுள்ளது. இதில் ஒரு ஆண், ஒரு பெண் உருவங்கள் சுகாசனக்கோலத்தில் இடம் பெற்றுள்ளன. இதில் கணவன் இறந்ததன் காரணமாக மனைவி உடன்கட்டை ஏறி இருக்கலாம் என்றும், இந்த சிற்பத்தில் வீரன் சற்று வித்தியாசமாக மனைவியை தனது வலது கையால் ஆசிர்வதிப்பது போல் இடம்பெற்று இருப்பது கூடுதல் சிறப்பாகும்.
வீரன் வாள் ஏதுமின்றி காணப்படுவதால் வீர செயலில் இறக்காமல் தெய்வ பக்தியின் காரணமாகவோ அல்லது ஏதேனும் சிறப்பு காரணங்களினாலோ உயிர் துறந்து இருக்கலாம் என கருத வாய்ப்புண்டு. மேலும் இந்த நடுகல்லின் மேல் பகுதியில் நாசிக்கூடு காணப்படுகிறது, இந்த சிற்பத்தின் வடிவமைப்பை வைத்துப் பார்க்கும்போது 16-ம் நூற்றாண்டை சேர்ந்த நாயக்கர் கால நடுகல்லாக கருதலாம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.